`மகன் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறேன்' - காவல்துறையிடம் கடிதம் கொடுத்த அ.தி.மு.க பிரமுகர் | ADMK cadre apologize with police for his son

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (23/03/2018)

கடைசி தொடர்பு:17:30 (23/03/2018)

`மகன் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறேன்' - காவல்துறையிடம் கடிதம் கொடுத்த அ.தி.மு.க பிரமுகர்

போலீஸ்

போக்குவரத்து காவல்துறையிடம் தகராறு செய்த வாலிபரின் தந்தை, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார். அதில், 'தன்னுடைய மகன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று குறிப்பிட்டுள்ளார். 

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் போக்குவரத்து போலீஸாருக்கும் இளைஞர்கள் சிலருக்கும் இடையே நடந்த சண்டை வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோ குறித்து சென்னை மாநகர போலீஸார் கூறுகையில், ``கடந்த 21.03.2018ல் வேளச்சேரி போக்குவரத்துக் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கார்த்திகேயபாண்டியன், வேளச்சேரி விஜயநகர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்தவர் ஹெல்மெட் அணியாமல் அவ்வழியாக வந்தார்.

அவரை மடக்கிய உதவிஆய்வாளர் கார்த்திகேயபாண்டியன், போக்குவரத்து விதிமீறியதற்காக மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ.100 அபராதம் விதித்தார். அதற்கான இ சலான் ரசீதை அவரிடம் கொடுத்தபோது அதை அவர் கிழித்தெறிந்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், ராகேஷ், என்று தெரிந்தது. மேலும், உதவி ஆய்வாளரைத் தகாத வார்த்தையால் ராகேஷ் திட்டியுள்ளார். இதனால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று உதவி ஆய்வாளர் கார்த்திகேயபாண்டியன், கூறியதற்கு ராகேஷ் தகராறு செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். 

 போலீஸ்

இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்தவர்கள், காவல்துறைக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்தில் அதைச் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது ராகேஷ் என்பது தெரியவந்தது. மேற்படி காவல்துறையினர் எந்தவித கையூட்டும் கேட்கவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராகேஷ் மற்றும் ஏழு பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றனர். 

இந்தநிலையில் ராகேஷின் தந்தை ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் கார்த்திகேயபாண்டியனிடம் மன்னிப்பு கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, எனது மகன் ராகேஷ், உடல் நலம் பாதிக்கப்பட்டவர். மனநிலை சற்று பாதிக்கப்பட்டவர். என்னுடைய மகன் செய்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். மிகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ராஜேந்திரனிடம் பேச அவரது செல்போனுக்குத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரிடம் விளக்கம் கேட்க முடியவில்லை. ராஜேந்திரன், அ.தி.மு.க.வின் விசுவாசி என்ற தகவலும் உள்ளது.   

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ராகேஷின் தந்தை கொடுத்த கடிதம் அடிப்படையில் அவரிடம் அதற்கான ஆதாரங்களைக் கேட்டுள்ளோம். ஆதாரங்களைக் கொடுத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. அதே நேரத்தில் மற்றவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.