வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (23/03/2018)

கடைசி தொடர்பு:19:20 (23/03/2018)

`25 ஆண்டு சிறை வாழ்க்கை போதும்!' - வீரப்பன் அண்ணனுக்குக் குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன். '25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் மாதையனை அரசு விடுதலை செய்ய வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

மாதையன்

கோவை மத்திய சிறையில் 25 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வருகிறார் 'சந்தனக் கடத்தல்'  வீரப்பனின் அண்ணன் மாதையன். 1987-ம் ஆண்டு, சத்தியமங்கலம் வனப்பகுதியில் சிதம்பரநாதன் என்கிற வனச்சரகர், வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாகச் சிறையில்  அடைக்கப்பட்டவர்களுள் வீரப்பனின் அண்ணன் மாதையனும் ஒருவர். இந்தவழக்கில் மாதப்பனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோவை சிறையில் இருந்துவருகிறார். 70 வயதைக் கடந்த மாதையனுக்கு இன்று அதிகாலை சிறையில் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பயப்படும்படியாக ஒன்றுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ச.பாலமுருகன், 'ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் 10 அல்லது 14 ஆண்டுகளுக்குப் பின், முன்விடுதலை எனும் சிறப்பு அனுமதியில் விடுவிக்கப்படுவர். ஆனால், இந்த வகை விடுதலையில், கொடிய குற்றம், மதக் கலவரம், பணத்துக்காகக் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில் பிரித்து, இக்குற்றத்தின்கீழ் தண்டனைப் பெற்ற சிறைக் கைதிகளை அரசு விடுதலை செய்யவதில்லை. சிறைத் தண்டனை பெற்றவர்கள் எல்லோருக்கும் சிறை வாழ்க்கை என்பது பொதுவானதாக இருக்கும் பட்சத்தில், பல ஆண்டு சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்வதில் இந்தப் பாகுபாடு சரியானதல்ல. 

மாதையன் மனைவி மற்றும் மாதையன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் அதிரடிப்படையால் கடும் சித்திரவதைக்கு உள்ளானவர்கள். அவரின் மகன் சென்னையில் வழக்கறிஞராக இருந்தார். சமீபத்தில், அவரும் விபத்தில் இறந்துவிட்டார். ஆதரவற்ற நிலையில் உள்ள சூழலில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தமிழக அரசு தனக்குள்ள அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 161-ன் கீழ் உள்ள மன்னிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரை விடுவிக்கலாம் எனத் தீர்ப்பளித்தது. 

ஆனால், தீர்ப்பு வந்து பல மாதங்கள் ஆகியும், அவர் விடுதலை செய்யப்படவில்லை. இதேபோல் வீரப்பன் வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் சிலரைக் கர்நாடக அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், மாதையன் இன்று 23.3.2018 உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகள் அவரின் விடுதலைக்குக் குரல் கொடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.