வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (23/03/2018)

கடைசி தொடர்பு:18:25 (23/03/2018)

நடராசன் படத்திறப்பு நிகழ்ச்சி! - மூன்று பேருக்கு அழைப்பு கிடையாது

மறைந்த நடராசனின் படத்திறப்பு விழா மார்ச் 30-ம் தேதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின் ஆகிய மூன்று பேருக்கும் அழைப்பு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சசிகலாவின் கணவர் நடராசன் ஒரு வாரத்திற்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பைத் தொடர்ந்து சசிகலா பரோலில் பெங்களூரு சிறையிலிருந்து தஞ்சாவூர் வந்துள்ளார். முதலில் 15 நாள்கள் பரோல் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போது பத்து நாள்கள்தான் எனச் சொல்லப்படுகிறது. 

கடந்த 21-ம் தேதி நடராசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் இல்லத்தில் தங்கியுள்ள சசிகலாவை ஏராளமானவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். விளார் கிராமத்தைச் சேர்ந்த விஜயாம்பாள் என்ற வயதான பெண்மணி, நான்  நடராசன் வீட்டில்தான் வளர்ந்தேன். அவர் அம்மாதான் என்னை வளர்த்தார்கள். அய்யா இறந்த அன்று நான் வெளியூரில் இருந்தேன். அதனால் இறுதிச் சடங்கிற்கு வர முடியவில்லை. எப்படியாவது சின்னம்மாவைச் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்னை உள்ளே விடுங்கள் எனக் கதறி அழுதபடி கேட்டில் நிற்பவர்களிடம் முறையிட்டார். அவர்கள் உள்ளே அனுமதிக்காததால் நீண்ட நேரம் அழுதபடி அங்கேயே நின்றார். 

இந்த நிலையில் சசிகலா, அவரது உறவினர்களோடு நடராசன் படத்திறப்பு விழா நிகழ்ச்சி குறித்து ஆலோசித்தார். பின்னர், வரும் 29-ம் தேதி பெண்கள் சடங்கும், 30-ம் தேதி அவர்களுக்குச் சொந்தமான தமிழரசி மண்டபத்தில் படத்திறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய மூன்று பேரையும் தவிர பழ.நெடுமாறன், திருமாவளவன், ஜி.கே.வாசன், சீமான் போன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்க முடிவு செய்துள்ளனர். அவர்களின் அனுமதி பெற்று அழைப்பிதழில் அவர்கள் பெயர் அச்சடிக்கப்படும் என சசிகலா வட்டாரத்தில் சொல்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க