வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (23/03/2018)

கடைசி தொடர்பு:18:55 (23/03/2018)

எல்.இ.டி விளக்குக்கு மாறிய தென்னக ரயில்வே! - ஆண்டுக்கு 70 லட்சம் யூனிட் மின்சாரம் மிச்சம்!

மின் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு, தென்னக ரயில்வே நிறுவனத்துக்கு உட்பட்ட 714 ரயில் நிலையங்களில் முழுமையாக எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் யூனிட் மின்சாரம் மிச்சமாகும் நிலைமை உருவாகியுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம்

ரயில் நிலையங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து ரயில் நிலையங்களில் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஹாலஜன் விளக்குகள், மெர்குரி லைட், ஒளிரும் தன்மையுள்ள விளக்குகள் ஆகியவற்றுக்குப் பதிலாகக் குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தி அதிக வெளிச்சத்தைப் பெறக்கூடிய எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தலாம் என ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. 

அதன்படி, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக அவற்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், `ரயில்வே நிலையங்கள் அனைத்திலும் எல்.இ.டி மின்விளக்குகள் அமைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டது. பாரம்பர்ய மின்விளக்குகளைவிடவும் எல்.இ.டி விளக்குகள் மின் தேவையைக் குறைப்பதுடன் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு உதவும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என அதில் தெரிவிக்கப்பட்டது. 

உடனடியாக இந்தப் பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. அதன்படி, கடந்த நவம்பர் மாத இறுதிக்குள்ளாக நாட்டின் 3,500 ரயில் நிலையங்களில் 20 லட்சம் எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டு அந்த ரயில் நிலையங்கள் முழுமையாக எல்.இ.டி பயன்பாட்டுக்கு மாறின. அந்த முயற்சியில் எடுத்த கணக்கெடுப்பின்படி, வழக்கமான மின் உபயோகத்தைவிடவும் 10 சதவிகிதம் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. அதனால் இந்தப் பணிகள் வேகம் அடைந்தன.

அதன்படி, தென்னக ரயில்வேயில் பயன்பாட்டில் இருக்கும் 714 ரயில் நிலையங்கள் முழுமையாக 100 சதவிகிதம் எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டுவிட்டன. மார்ச் 31-ம் தேதி வரையிலும் கால அவசாகம் இருந்தபோதிலும் அதை மார்ச் 15-ம் தேதியே நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது, தென்னக ரயில்வே. மொத்தம் 86,291 மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 79,80,000 யூனிட் மின்சாரம் ஆண்டு முழுவதும் சேமிக்கப்படும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் மிச்சமாகும் நிலை உருவாயிருக்கிறது. 

ரயில் நிலையங்களில் மின் விளக்குகளை அமைக்க மொத்தமாக 5.92 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மின் சிக்கனம் காரணமாக இந்தத் தொகையானது 11 மாதத்திலேயே ரயில்வேக்கு கிடைத்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, ரயில்வே சேவைத்துறை கட்டடங்கள் மற்றும் ரயில்வே குடியிருப்புகளிலும் எல்.இ.டி பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.