`விசாரணைக்கு உகந்தது இல்லை!’ - நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நடிகர் தனுஷுக்கு எதிராக மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்,  மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் எனப் பல ஆண்டுகளாக உரிமை கோரி வருகின்றனர். மகன் என்ற முறையில் நடிகர் தனுஷ், தங்களுக்குப் பண உதவித்தொகை வழங்கக் கோரியும் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை விசாரிக்கத் தடை விதித்தது.

இந்த வழக்கில் நடிகர் தனுஷ் போலியான பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ரேஷன் கார்டு நகல்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றி, சாதகமாக உத்தரவு பெற்றதாகவும், இதனால் அவர்மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் கதிரேசன் தம்பதி கே.புதூர் காவல்நிலையத்திலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேசன் சான்றிதழ், ஆதார் கார்டு, குடும்ப அட்டை அனைத்தும் போலியானது எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது தொடர்பாக விசாரித்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் இன்று (23.3.2018) தீர்ப்பளித்த நீதிபதி ராஜமாணிக்கம், `நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!