`சாக்கடைக் கழிவுகளைக்கொண்டு குடிநீர்த்தொட்டிக்கு அஸ்திவாரம் அமைப்பதா?’ - போராட்டத்தில் பொங்கிய மக்கள் | People staged protest in Kovilpatti

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (23/03/2018)

கடைசி தொடர்பு:20:40 (23/03/2018)

`சாக்கடைக் கழிவுகளைக்கொண்டு குடிநீர்த்தொட்டிக்கு அஸ்திவாரம் அமைப்பதா?’ - போராட்டத்தில் பொங்கிய மக்கள்

கோவில்பட்டியில் சாக்கடைக் கழிவுகளைக் கொண்டு மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டிக்கான அஸ்திவாரப்பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், 2வது குடிநீர் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக நகரில் சில  இடங்களில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடராஜபுரம் தெரு பழைய ஆட்டுச் சந்தைப் பகுதியில் ஒரு மேல்நிலைக் குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிக்கான அஸ்திவாரம் அமைக்க, காய்ந்த பாதாளச் சாக்கடைக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மேல்நிலை தொட்டிக்காகக் குழி தோண்டும் மண்ணை, அதிகாரிகளின் துணைகொண்டு ஒப்பந்ததாரர்கள்  விற்பனை செய்துவிட்டதாகவும் நகராட்சிப் பொறியாளர் இதைக் கண்காணிக்கத் தவறிவிட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பைக் கழிவுகளைக் கொண்டு, தொட்டிக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி  மக்கள், கோவில்பட்டி - இளையரசனேந்தல் சாலையில் தீடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத் தொடர்ந்து தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் நகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள்  நிறுத்தப்படுவது மட்டுமின்றி, சாக்கடைக் கழிவுகளைக் கொண்டு அஸ்திவாரம் அமைக்க முயன்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சாக்கடைக் கழிவுகள் அகற்றும் பணியும் தொடங்கியது. கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில், 2வது குடிநீர் திட்டத்தின்கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல அந்த மேல்நிலைத் தேக்கத்தொட்டி பணியிலும் சாக்கடைக் கழிவுகள் கொண்டு கட்டப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால் அவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திடீர் சாலை மறியலால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க