குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து 73 பேரிடம் விசாரணை! | Inquiry officer conduct enquiry to 73 peoples over Kurangani forest fire

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (23/03/2018)

கடைசி தொடர்பு:21:00 (23/03/2018)

குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து 73 பேரிடம் விசாரணை!

குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பாகப் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை செய்ய தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டார். விசாரணையை நேற்று முன்தினம் தொடங்கிய அவர், விபத்து நடந்த குரங்கணி மலைப்பகுதியில் உள்ள ஒத்தமரம் என்ற இடத்துக்குச் சென்று நேற்று ஆய்வு செய்தார். பின்னர், கொழுக்குமலை எஸ்டேட்டுக்கும், டாப் ஸ்டேஷனுக்கும் சென்று ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து இன்று போடி நகராட்சி அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் விபத்து நேரத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார். அவை எழுத்துபூர்வமாகவும் வீடியோ மூலமும் பதிவு செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் இருந்து விபத்துகுறித்த ஆவணங்கள், கோரிக்கை மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், சில சமூக ஆர்வலர்கள் தங்களது கோரிக்கைகளை அதுல்ய மிஸ்ராவிடம் வழங்கினர்.

விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நேற்று விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தேன். இன்று மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 73 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. இதில், பொதுமக்கள் 16, வனத்துறையினர் 21, காவல்துறையினர் 17, வருவாய்துறையினர் 4, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் 9 மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 2, கோரிக்கையை மனுவாகக் கொடுத்தவர்கள் 4 பேர் என மொத்தம் 73 பேரிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், சம்பந்தப்பட்ட டிரெக்கிங் கிளப்பின் தன்னார்வலர்களிடமும் விசாரணை செய்திருக்கிறோம். இந்த விபத்து தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மட்டுமல்லாம், சில எக்ஸ்பர்ட்களிடமும் வன ஆர்வலர்களிடமும் பேசியிருக்கிறோம். டிரெக்கிங் சென்ற குரங்கணி - கொழுக்குமலைப் பாதையானது முறையான டிரெக்கிங் பாதை அல்ல. தேவை ஏற்படும் பட்சத்தில் மீண்டும் குரங்கணி வந்து விசாரணை செய்வேன். இதை வைத்து 2 மாதத்துக்குள் விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்" என்றார்.