முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் புதையல்! - 10 ஆண்டுகள் ஆகியும் தேடல் | searching for LTTE's treasure including arms, jewels stopped again

வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (23/03/2018)

கடைசி தொடர்பு:20:43 (25/03/2018)

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் புதையல்! - 10 ஆண்டுகள் ஆகியும் தேடல்

விடுதலைப்புலி

முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசின் இறுதிப் போர் நடந்த பகுதியில், தங்கம் உட்பட விடுதலைப் புலிகளின் மதிப்புமிக்க செல்வங்கள், ஆவணங்கள், ஆயுதங்கள் புதைக்கப்பட்டன என்பது இன்றும் பரபரப்பான தகவலாகவே இருந்துவருகிறது. 

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடந்த செவ்வாயன்று  `புதையலை’த் தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது. அதில் எதிர்பார்க்கப்பட்ட எந்தப் பொருளும் சிக்காததால், தொடர்ந்து தோண்டிப்பார்ப்பது என முடிவு செய்யப்பட்டது. நேற்று வியாழனன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை  `புதையல்’ தோண்டும் பணி மீண்டும் நடந்தது. மண் தோண்டும் இயந்திரங்களுடன் இரண்டு மணி நேரம் அகழ்ந்து பார்த்ததிலும் புதையல் எதுவும் தட்டுப்படவில்லை. 

மண்ணைத் தோண்டுவதற்கு உரிய நேரம் இல்லாததால், மண்ணைத் தோண்டும் பணி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காகப் போலீஸாரை நிறுத்துமாறு மாவட்ட நீதிபதி இ.லெனின்குமார் உத்தரவிட்டார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரும் இறுதி இனப்படுகொலை நடந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில், இதைப்போலவே புலிகள் புதையலைப் புதைத்திருந்ததாகப் பல மீட்டர் ஆழத்துக்கு மண்ணைத் தோண்டி சோதனையிட்டும், அதில் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. இப்போதும் தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. போர்க்களத்திலிருந்து புலிப்போராளிகள் இயக்கம் அகற்றப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர்களைப் பற்றிய இறுதிக்கட்டத் தகவல்கள் மர்மம் நிறைந்ததாகவே உள்ளன.