`ராமர் படம் அவமதிப்பு!' - மயிலாடுதுறையில் கடையடைப்பு

ராமர் படம் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.  

கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள போஸ்டர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், கடந்த 20-ம் தேதி புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு எனப் பல்வேறு இயக்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ராமர் படத்தை அவமதித்ததாகப் புகார் எழுந்தது. அதேபோல், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் படங்களும் அவதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, எதிர்ப்புக் கோஷம் போட்டபடி ஊர்வலமாகச் சென்று கிட்டப்பா அங்காடி முன்பாக மறியல் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாகத் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் இளையராஜா, செயலாளர் மகேஷ், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 14 பேரை மயிலாடுதுறை போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள்மீது அரசுக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டுதல், இரு சமூகத்துக்கிடையே மோதலை உருவாக்கும் செயலில் ஈடுபடுதல் போன்ற சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் உத்தரவின்படி, 14 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  

இந்நிலையில், ஸ்ரீ ராமபிரான் திருஉருவப் படத்தை அவமானப்படுத்திய சமூக விரோதிகளைக் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டும் என்றும், தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்படும் சமூக விரோதிகளைக் கண்டித்தும், புதிதாக முளைத்துள்ள இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு மயிலாடுதுறை நகரில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்தது. இதைப் பா.ஜ.க. முன்நின்று நடத்துவதாலும், காவல் துறை மற்றும் வர்த்தகர் சங்கம் மறைமுக ஆதரவு அளித்ததாலும், இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.  
 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!