`சந்திரயான்-2 விண்கலம் அக்டோபரில் ஏவப்படும்’ - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

நிலவைப் பரிசோதனை செய்யும் சந்திராயன் - 2 விண்கலம், ஏப்ரல் மாதத்திற்குப் பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

இஸ்ரோ தலைவர் சிவன்

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008 ம் ஆண்டு சந்திராயன்-1 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இது நிலவில் இருக்கும் நிலப்பரப்பை ஆய்வு செய்து தகவல் அனுப்பும் திறன் கொண்டது. இதன் மற்றுமொரு பாகம் 2017 -2018 ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்படும் என முன்னரே இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி அதற்கான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. தற்போது ஓரளவு இந்த ஆராய்ச்சிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், ``சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படுவது குறித்து விஞ்ஞானிகளுடன் ஆலோசித்தோம். அதில் சந்திராயன்-2 விண்கலத்தை ஏப்ரல் மாதத்திற்குப் பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம். நிறைய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், சந்திராயன் - 2 திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்திராயன்-2 ஏவுகணை சுமார் 3,290 கிலோ எடை கொண்டது. இது முற்றிலும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இது நிலவின் சுற்றுப்பாதையில் தரையிறங்கி நிலவின் பரப்பு, சந்திரகிரகணம் உள்ளிட்டவை குறித்த தகவல்களைச் சேகரிக்க உள்ளது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!