வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (23/03/2018)

கடைசி தொடர்பு:11:07 (04/04/2018)

``எம் பொண்ணு எங்கம்மா..?” - `ஹாசினி’ என்னும் பட்டாம்பூச்சி! அத்தியாயம் - 4

ஹாசினி

குழந்தைகள் தங்களின் உடல் நலத்தைப் பேணுவதற்கும், ஒற்றுமையாய் இருப்பதற்கும் குழந்தைகளைப் பார்த்து, ``ஓடி விளையாடு பாப்பா” என்றார் மகாகவி பாரதியார். அப்படி ஓடி விளையாடும் அறியா வயது குழந்தைகளைத்தான் பாலியல் சீண்டல்கள் மூலம் பாழாக்குகின்றனர் சில பாவிகள். 

சாக்லேட், பிஸ்கட், பொம்மை உள்ளிட்டவற்றோடு விளையாட்டையும் அதிகம் நேசித்தவள் ஹாசினி. எப்போதும் தன் வயதுடைய குழந்தைகளுடன் விளையாடுவதை அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவள் விளையாடுவது குறித்து அவளுடைய அப்பா, ``இந்தக் குடியிருப்புல மொத்தம் ஏழெட்டுக் குழந்தைங்க இருக்கும். எல்லாக் குழந்தைகளும் பார்க்கிங்ல போய் விளையாடுவாங்க. அவங்களை எல்லாம் ஹாசினிதான் பார்த்துக்குவா. சின்ன வயசுலேயே ரொம்பப் பொறுப்பா இருப்பா. ஒரு நிமிஷம் சும்மா இருக்கமாட்டா” என்கிறார் கண்ணீருடன். 

தஷ்வந்த்

இப்படியிருக்கும் ஹாசினியை, நாள்தோறும் கவனித்து வருகிறான் அதே குடியிருப்பில் வசிக்கும் ஓர் இளைஞன். அந்தக் குடியிருப்பின் மேல்தளத்தில் மூன்று வீடுகள். அதில் உள்ள ஒரு வீட்டில்தான் இந்த இளைஞன் வசித்து வந்தான். சேகர் - சரளா தம்பதியின் மகனான அந்த இளைஞனின் பெயர் தஷ்வந்த். அவனைப் பற்றி அங்குள்ளவர்கள், ``அவன், டிப்ளோமா இன்ஜினீயரிங் படித்துவிட்டுச் சென்னை தரமணியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தான். அவனுக்கு இரவுப் பணி என்பதால், பகலில் பெரும்பாலும் வீட்டிலேயேதான் இருப்பான். அவன், எப்போதும் வாசல் கேட்டைத் திறந்துப் போட்டுவிட்டுப் போய்விடுவான். வேறு யாராவதுதான் கேட்டை மூடுவார்கள். அதுமட்டுமல்லாது, வீட்டுக்குள் அவன் இருக்கும்போதெல்லாம் சவுண்டு அதிகமாக வைத்துத்தான் பாட்டுக் கேட்பான். அவன், குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் சாக்லேட், பிஸ்கட் கொடுத்துப் பேசுவான். குழந்தைகளை ஈர்ப்பதற்கு என்றே நாய்க்குட்டி ஒன்றையும் வளர்த்தான். அவனுக்குக் குழந்தைகள் மீது எப்போதும் ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது. மாதத்துக்கு ஒரு செல்போன், வருடத்துக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் என ஜாலியாகவே இருப்பான். இப்படி அவனுக்கு பைக் மீதிருந்த அலாதி பிரியத்தினால், அந்த ஏரியாவில் உள்ள ஒருவருடைய பைக்கை அவன் திருடியதாகப் புகார் ஒன்றும் இருக்கிறது. அந்த விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக தஷ்வந்தின் பெற்றோர் எதிர்த்தரப்பிடம் கட்டப் பஞ்சாயத்து செய்து பிரச்னையைச் சுமுகமாக முடித்துவிட்டார்கள்.  

இதுதவிர, அவன் டென்னிஸ் கோச்சாகவும் இருந்தான். அப்படி இருந்த ஒருசமயத்தில் டென்னிஸ் பயிற்சிபெற வந்த ஒரு சிறுமியைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயற்சி செய்தது தொடர்பாக, அவன்மீது மற்றொரு புகாரும் இருக்கிறது. இதுபோல் அவன் நிறைய தீயச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தபோதே அவனுடைய பெற்றோர் அவனைத் திருத்தியிருந்தால் அவனுக்கு இந்த நிலை வந்திருக்காது” என்று தஷ்வந்த் பற்றிச் சொல்லும் அவர்கள், “அவனுடையச் செயல்பாடுகள் காரணமாகவே, அவனது குடும்பம் பல வீடுகள் மாறியிருக்கிறது” என்று அவனுடைய குடும்பம் பற்றியும் சொல்கின்றனர்.

ஹாசினிஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையின்போது, ஹாசினி எப்போதும்போல் மேல்தளத்தில் உள்ள ஒரு வீட்டுக் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவள், குழந்தைகளுடன்தானே விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த அவளுடைய பெற்றோர், அருகிலிருக்கும் மார்க்கெட்டுக்குச் செல்கின்றனர். அந்த நேரத்தில்தான் அந்தக் கொடூரச் சம்பவம் நடக்கிறது. நேரம் ஆனதால், தன்னோடு விளையாடிய குழந்தைகள் ஹோம்வொர்க் செய்ய உட்காருகின்றனர். இதனால் ஹாசினியும் ஹோம்வொர்க் செய்ய வீட்டுக்கு வருகிறார். அப்படித் தன் வீட்டுக்கு வருவதற்காக மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருக்கும்போது... தான் ஆசையாய் வளர்க்கும் நாய்க்குட்டியை ஹாசினியிடம் காட்டி, தன் வீட்டுக்கு அழைக்கிறான் தஷ்வந்த். அந்த நாய்க்குட்டியைப் பார்த்து, அதன் பின்னால் ஓடிய ஹாசினியிடம், தன் பாலியல் சேட்டையை அரங்கேற்றுகிறான், தஷ்வந்த். அவனுடைய பாலியல் வன்புணர்விலிருந்து தாக்குப்பிடிக்க முடியாமல் கத்துகிறாள்; கதறுகிறாள். அவள் போடும் சத்தத்தை அடக்க... முகத்தில் பெட்ஷீட்டை வைத்து அழுத்துகிறான். அந்த அழுத்தம் ஹாசினியின் மூச்சையே முடித்துவைக்கிறது. அதற்குப் பிறகு அவன் செய்ததுதான் இன்னும் கொடூரம். துவண்டுபோன அந்தப் பிஞ்சு உடலை ஒரு பேக்கில் வைத்து, தோளில் சுமந்துகொண்டு வெளியேறும் தஷ்வந்த், தன்னுடைய பைக்கில் அனகாபுத்தூருக்குச் செல்கிறான். அங்கு, ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில், ஹாசினியின் உடலைத் தீ வைத்து எரித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புகிறான்; எப்போதும்போல ஜாலியாக இருக்கிறான்.   

இந்த நேரத்தில் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்த ஹாசினியின் பெற்றோர், சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வருகின்றனர். மகளைக் காணாது அதிர்ச்சியடைகின்றனர்; அழுகின்றனர்; ஆர்ப்பரிக்கின்றனர். பிறகு குழந்தையைத் தேட ஆரம்பிக்கின்றனர். ஹாசினியைக் காணாது, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு மட்டுமல்லாது, அந்தத் தெருவே பதற்றத்துக்கு ஆளாகிறது. 

ஹாசினியுடன் விளையாடிய குழந்தைகளிடம் அவளின் பெற்றோர், ``எம் பொண்ணு (ஹாசினி) எங்கம்மா...” என்று அழுதபடியே கேட்கின்றனர். அவர்களோ, ``நாங்க ஹோம்வொர்க் பண்ண உட்கார்ந்துட்டோம். ஹாசினி அப்பவே கீழே போயிட்டாளே” என்று தெரிவிக்கின்றனர். ஹாசினியின் பெற்றோர்களுக்கு முகம் சுருங்குகிறது; மனம் இறுகுகிறது. குழந்தைக்கு ஏதோ நடந்திருக்கிறது என்கிற பதற்றத்தில் இருவரும் கண்ணீரும், கவலையுமாக தவிக்கின்றனர். ஹாசினியுடைய உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லியபடியே குழந்தையைத் தேட ஆரம்பிக்கின்றனர். அவர்கள் அனைவருடனும் சேர்ந்து, எதுவும் நடக்காதது போன்று, தஷ்வந்தும் குழந்தையைத் தேடினான்....

ஹாசினி சிறகடிக்கும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்