`எங்களை அழித்துக் கொண்டிருக்கும் சிமென்ட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது!’ - கொதிக்கும் மக்கள் | Ariyalur villagers protest against cement factory expansion

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (24/03/2018)

கடைசி தொடர்பு:00:00 (24/03/2018)

`எங்களை அழித்துக் கொண்டிருக்கும் சிமென்ட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது!’ - கொதிக்கும் மக்கள்

மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் அழித்துக்கொண்டிருக்கும் தனியார் சிமென்ட் ஆலைகளை விரிவாக்கம் செய்யக் கூடாது என்று புதுப்பாளையம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அடுத்தகட்ட போராட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர்.

                       

அரியலூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகள் இயங்கிவருகின்றன. அதில் 166க்கும் மேற்பட்ட சுண்ணாம்புச் சுரங்களும் இயங்கிவருகின்றன. இந்தச் சுரங்கங்கள் கனிம விதிமுறைகளுக்குப் புறம்பாக அதிக ஆழத்தில் வெட்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, சுண்ணாம்பை வெட்டி எடுக்கப்படும் போது ஏற்படும் கடுமையான மாசினால் விவசாயம் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

                       

இந்நிலையில் தற்போது புதுப்பாளையம் கிராமத்துக்கு அருகே புதிய சுரங்கம் அமைக்கத் திட்டமிட்டுள்ள ராம்கோ சிமென்ட் ஆலை வருகிற 24ம் தேதி பொதுமக்கள் கருத்துக்கேட்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராமப் பொதுமக்கள் கனிம நிறுவனம் தொடங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.

                        

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட முருகன் என்பவர் கூறுகையில், ”ஆலத்தியூர் அருகே இயங்கிவரும் தனியார் சிமென்ட் ஆலை மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் அழித்துக்கொண்டிருக்கிறது. அந்த ஆலைகளுக்கு எங்கள் நிலங்களையெல்லாம் வற்புறுத்தி வாங்கியது மட்டுமல்லாமல் நாங்கள் குடியிருக்கும் இடங்களையும் கேட்டு பிரச்னை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் 500க்கும் மேற்பட்ட லாரிகள் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் செல்வதால் சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்பட்டு விவசாயப் பயிர்கள் கருகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

                                

அதேபோல் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி, வீடில்லா மக்களுக்கு 3 சென்ட்  நிலம் வழங்கக் கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு முன்பே உறுதியளித்தால்,.புதிய சுரங்கம் விரிவாக்கத்துக்கு ஒத்துழைப்போம். இல்லையேல் எங்களது போராட்டம் வேறுவிதமாக இருக்கும். நாளை (24ம் தேதி) நடத்தப்படும் கருத்துக்கேட்பு கூட்டம் வெறும் கண்துடைப்பாகவே இருக்கும். அதிகாரிகள் ஆலை நிர்வாகத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு மக்களுக்கு எதிராகப் பேசிமுடித்துவிட்டு செல்வார்கள். இதற்கு எதற்கு ஒரு கருத்துக்கேட்புக் கூட்டம்" என்று காட்டதோடு முடித்தார்.