வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (24/03/2018)

கடைசி தொடர்பு:00:30 (24/03/2018)

`ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்த விசாரணை முடிய ஒரு வருடமாகும்!’ - ஆணையர் தகவல்

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்த விசாரணை முடிய ஓராண்டு காலமாகும் என விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

ஜல்லிக்கட்டு

மிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு  போராட்டத்தின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டியின் விசாரணை  அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெற்ற சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் விசாரணை குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ராஜேஸ்வரன், "ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பாக 4-வது கட்டமாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  மதுரையில் மட்டும் இதுதொடர்பாக 1,002 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டியுள்ளது.  இதுவரை  291பேருக்கு தான் சம்பன் அனுப்பி உள்ளோம், இன்னும் 800 பேருக்கும் மேல் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர், ஆணையத்தால் சம்மன் கொடுத்து ஆஜராக வரவில்லை என்றால், காவல்துறை உதவியுடன் அவர் ஆணையத்தில் ஆஜராக்கப்படுவார். இந்த ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான முழு விசாரணையும் முடிய ஒரு வருடம் வரை ஆகும். 

இன்னும்  மதுரையில் மட்டும் 800-க்கும் அதிகமான நபர்களை விசாரிக்க வேண்டி உள்ளது என்பதால் மாதத்தில் இரண்டு முறை 6 நாட்கள் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளோம். விசாரணையின் போது தேவைப்படும் யாராக இருந்தாலும் அவர்களை ஆணையம் அழைத்து விசாரணை நடத்தும். அவர்கள் ஆணையத்தின் சாட்சியாக சேர்த்து விசாரிக்கப்படுவர். சென்னையில் நடைபெறும் விசாரணையின் போது காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அடுத்த மாதம் 25 முதல் 27 -ம் தேதி வரை மீண்டும் மதுரையில் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.