வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (24/03/2018)

கடைசி தொடர்பு:09:56 (24/03/2018)

``பிளிச்சிங் பட்டறையை இங்கு செயல்பட அனுமதிக்கக் கூடாது" - கிராம மக்கள் முற்றுகை!

திருப்பூர் அருகே சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக் கழிவுநீரை முறைகேடாக வெளியேற்றியதாக, தனியார் பிளிச்சிங் பட்டறையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். 

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ரஹாரப்புதூர் அருகே வேட்டுவபாளையம் என்ற இடத்தில் உள்ள பொதுசுத்திகரிப்பு நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பிளிச்சிங் பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டறையில் சலவை செய்யப்பட்டு, முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாத ரசாயன கழிவுநீர், அவ்வப்போது முறைகேடாக வெளியேற்றபடுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ, அந்தத் தருணம் பார்த்து மழைநீருடன் சாயக் கழிவுநீரைத் திறந்துவிடுவது இந்நிறுவனத்தின் வாடிக்கையாகிவிட்டது என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

மேலும், இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தகவல் அளித்து, அவர்களும் இங்கு ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தவறை கண்டறிந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இனி இந்த பிளிச்சிங் பட்டறை இங்கு செயல்பட அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.