வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (24/03/2018)

கடைசி தொடர்பு:06:20 (24/03/2018)

நாட்டுக்காய்கறிகள் விலை தொடர்வீழ்ச்சி... விரக்தியில் சிறு வியாபாரிகள்!

அன்னவாசல் பகுதிகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பச்சைமிளகாய் உள்ளிட்ட பல்வேறு நாட்டுக்காய்கறிகள் காட்டுத் தோட்டப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு, உள்ளூர் சந்தைகளில் அதிக அளவு விற்பனைக்கு வந்துள்ளதால் அவைகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அவற்றை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

நாட்டுக்காய்கறிகள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், ஆலங்குடி, கீரமங்கலம், உள்ளிட்டப் பகுதிகளில் சிறு விவசாயிகள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக தோட்டங்களில்  நாட்டுக்காய்கறிகளை பயிரிட்டு உள்ளூர் சந்தைகளுக்குக் கொண்டுச் சென்று விற்பனை செய்வது வாடிக்கையான ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் சந்தை நடக்கும். தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு அதிகாலையிலேயே சந்தை நடக்கும் ஊர்களுக்கு பஸ் ஏறிச் சென்றுவிடுவார்கள். காலை முதல் இரவு வரை கிடையாகக் கிடந்து விற்பனை செய்தால், எல்லா செலவுகளும் போக, ரூபாய் 200-லிருந்து அதிகபட்சமாக ரூபாய் 500 வரை கிடைக்கும். கடந்த மாதம் கத்திரிக்காய் விளைச்சல் குறைவாகவே இருந்ததால், அதன்விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை விற்றது. 

இந்நிலையில் அன்னவாசல் பகுதிகளில் தற்போது கத்தரிக்காயின் விளைச்சல் அதிகரித்துள்ளதால், வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் கத்தரிக்காயின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.10-க்கு விற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆலங்குடி, கீரமங்கலம் பகுதியில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நாட்டுத் தக்காளி கிலோ 5 முதல் 10 ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 10 முதல் 20 ரூபாய்க்கும் சந்தைகளிலேயே விலை போவதால் சிறு வியாபாரிகள் விரக்தி அடைந்துள்ளனர். 

நாட்டுக்காய்கறிகள்

இப்போதுள்ள பஸ்கட்டணம், லக்கேஜ் கட்டணம் போன்றவை தாறுமாறாக இருப்பதால், சந்தைகளுக்கு தங்களது விளைப் பொருட்களை கொண்டு செல்லவும் முடியாமல் புலம்புகின்றனர். இதனால், இவர்கள் இளநீர், வெள்ளரி வியாபாரிகளின் பாணியில் கடை போடத்தொடங்கிவிட்டார்கள். விராலிமலை முதல் புதுக்கோட்டை சாலையில் இலுப்பூர், காலாடிபட்டி, சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் சாலை ஓரங்களில் கயிற்றுக்கட்டிலைப் போட்டு, தாங்கள் விளைவித்த நாட்டுக்காய்கறிகளை விவசாய சிறுவியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அத்துடன், அன்னவாசலை சுற்றியுள்ள முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை, பரம்பூர், வீரப்பட்டி, இலுப்பூர், மலைக்குடிப்பட்டி போன்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளை கூடைகளில் கொண்டுவந்து  இங்கு சாலையோரக் கடைகள்போட்டு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். அப்படி, விற்கப்படும் காய்கறிகள் விலை மலிவாகவும் ஃப்ரெஷ்ஷாகவும் கிடைக்கிறது. 

இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்போது,"எங்களுக்கு பொழப்பே இதுதான். கவனமா பராமரிப்பு செய்து காய்கறிகளை சாகுபடி பண்றோம். நிறைய விளைஞ்சுட்டா.. விலை இல்லே. விலை ஏறும்போது விளைச்சல் இருக்காது. அதான், ஊரு ஊரா சந்தைக்கும் போகாம, உள்ளூர் ரோட்டு மேலேயே கடை போட்டுட்டோம். கார்ல போறவங்க.. பைக்ல போறவங்க வண்டியை நிறுத்தி வந்து விரும்பி வாங்குவாறாங்க. ஏதோ ஆண்டவன் அன்றாடம் படி அளக்குறான்" என்றார்.