வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (24/03/2018)

கடைசி தொடர்பு:09:53 (24/03/2018)

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சூரியநாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டு இருப்பதற்கு அரசியல்வாதிகளிடம் மட்டும் அல்லாமல் வழக்கறிஞர்கள் மாணவர்களிடமும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

வலுக்கும் எதிர்ப்பு - வழக்கறிஞர்

தமிழகத்தின் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக புனே நகரில் பணியாற்றிய சூரியநாராயண சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டு இருப்பதற்கு தி.மு.க செயல்தலைவரான மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளரான வைகோ உள்ளிட்டோர் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், வழக்கறிஞர் சங்கங்கள், மாணவர்கள் தரப்பிலும் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கி இருக்கிறது. 

இந்த நிலையில், நெல்லை மாவட்ட வள்ளியூர் வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞருமான வலம்புரி மோசே செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சூரியநாராயண சாஸ்திரி என்பவரை ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். புனேவில் உள்ள சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அவர் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறார். 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாஸ்திரியை அழைத்து வந்து தமிழக சட்டப் பல்கலைக்கழகத்தின் அதிபதியாக்க ஆளுநர் தீர்மானித்து இருக்கிறார். தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டது முதலாகவே ஆய்வு என்ற பெயரில் கூட்டாட்சி கொள்கைக்கு குழிதோண்டுகிற கொடுமையை அரங்கேற்றி வருகிறார், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்தப் பாதகச் செயலை முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வேண்டுமானால் சகஜமானதாக இருக்கலாம்.  

ஆளுநர் தற்போது தனக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள வரம்புகளைத் தாண்டி, தமிழகத்தின் தார்மீக உரிமைகளைத் தகர்த்து எறிகிற அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த துணைவேந்தர் நியமனத்தை நிகழ்த்தி இருக்கிறார். தமிழகத்திலும் பல நூறு கற்றறிந்த சட்ட வல்லுநர்களும், முனைவர்களும் இருந்தும், ஆளுநரின் இந்த அநீதியான் நியமனம் தமிழகத்தின் இயலாமையை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசு பரிந்துரைத்த பட்டியலில் இருந்தவர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இது தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டம் 1996-ன் பிரிவுகளுக்கு முரணானது. அதனால் நேர்மையானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஆளுநரின் இந்த அநீதியான நியமனத்தை கண்டிக்க வேண்டும். அத்துடன் இந்த நியமனத்தை தடுத்து நிறுத்த வேண்டும். முன்னாள் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஆளுநர்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்பதை மாற்றிட சட்ட முன்வடிவைக் கொண்டுவந்து சட்டப் பேரவையில் நிறைவேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கே அனுப்பி வைத்ததை இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் மறந்து விடக்கூடாது. 

அதனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு துணை வேந்தரை மாற்றச் செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.