வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (24/03/2018)

கடைசி தொடர்பு:18:21 (30/06/2018)

107 வருடங்களுக்கு பிறகு அரசுப்பள்ளியில் நடந்த முதல் ஆண்டு விழா...! - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்

ஆங்கிலேயர்கள் காலத்தில் பாடசாலையாக  தொடங்கிய ஓர் அரசுப்பள்ளி 107 வருடங்களாக ஆண்டுவிழா கொண்டாடாமல் இருந்திருக்கிறது. அந்தப்பள்ளியில் நேற்று இரவு (23.03.2018) வெகு விமர்சையாக ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

அரசுப்பள்ளி ஆண்டு விழா

\புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள கடம்பராயன்பட்டி என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளி ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் (01.11.1911) அன்று புதுக்கோட்டை  சமஸ்தானத்தின் அங்கீகாரத்தில் ஆரம்பப் பாடசாலையாக தொடக்கப்பட்டது. இப்பள்ளியில் தற்போது கடம்பராயன்பட்டி, உசிலம்பட்டி, சோளச்சேரிபட்டி, கன்னியாபட்டி, தாழம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 85 மாணவர்கள் படிக்கின்றனர். 

ஆண்டு விழா

இப்பள்ளி தொடங்கிய  நாளிலிருந்து 107 ஆண்டுகளாக ஆண்டுவிழா நடத்தப்படாமல் இருக்கவே, இந்த வருடம் முதன்முறையாக ஆண்டு விழா நடைபெற்றது. இதனால் பள்ளி வளாகமே விழாக்கோலமாக காட்சியளித்தது. பள்ளி அமைந்திருந்த தெருவெங்கும் தோரணங்களும், ஒலி பெருக்கிகளும் கட்டப்பட்டு இருந்தது. வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து கொடுத்து உபசரித்தனர். இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்  ஜோசப் சகாயராஜ் பேசும்போது, "இந்தப் பள்ளி தொடங்கப்பட்டதிலிருந்து  ஆண்டுவிழா என்பதே  நடைபெற்றதில்லை. இதனை அறிந்த நான், கிராமக் கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் ஆண்டு விழா நடத்தலாமா என ஆலோசனை கேட்டேன். 

அதற்கு அவர்கள், 'இதுவரை இந்தப்பள்ளியில் ஆண்டுவிழா நடத்தப்பட்டதில்லை. நீங்கள் நடத்துங்கள் நாங்கள் உதவி செய்கிறோம்' என்றார்கள். ஊர் தலைவர் கண்ணையனும்  'முதல்ஆண்டு விழா என்பதால், ஆகும் செலவுகள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்' என்றார்.

ஊர்ப்பொதுமக்களின் ஒத்துழைப்பால்  இன்று  ஊர்த்திருவிழா போல் ஆண்டு விழா நடைபெறுகிறது. இப்பள்ளியில் படிக்கும் அத்தனைக் குழந்தைகளையும் மேடையேற்றி, நடன போட்டியில் கலந்து கொள்ளச் செய்தோம். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் கடம்பராயன்பட்டி கிராமத்தை இன்னும் பசுமை கிராமமாக மாற்றவும் பள்ளியில் படிக்கும் 85 குழந்தைகளுக்கும் மரக்கன்றுகளை வழங்கினோம்" என்றார்.  அந்த ஊரைச் சேர்ந்த  ராசாத்தி என்பவர் பேசுகையில், "நான் இந்தப் பள்ளியில் தான் படித்தேன். பக்கத்து ஊர் பள்ளியில் ஆண்டு விழா நடக்கும்போது,  நம்ம பள்ளியில் ஏன் ஆண்டு விழா நடத்தமாட்டேங்குறாங்கன்னு ஏக்கமா இருக்கும். ஆண்டு விழா பற்றி பேச்சு ஆரம்பித்து இன்று வரை இருபத்தைந்து நாட்கள் ஆகிறது. தினமும் எங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் நடனம் கற்றுக்கொடுப்பதை குழந்தைகளோடு நாங்களும் கலந்து கொண்டோம். இன்று நான் படித்தப் பள்ளியில் என் பிள்ளை படிக்கும்போது முதல் ஆண்டு விழா நடைபெறுவது  அவ்வளவு சந்தோஷமா இருக்கு" என்றார் நெகிழ்ச்சி ததும்பும் குரலில்.