கோவிலை தூய்மை செய்த ஜப்பான்காரர்! - புதுக்கோட்டையில் நடந்த ருசிகரம்

நாட்டுநலத்திட்ட சிறப்பு முகாமில் மாணவர்களோடு மாணவராகக் கலந்துக்கொண்டு கோவிலில் ஒட்டடை அடித்தார் ஜப்பான்காரர் ஒருவர். இவர், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரோட்டரி சங்க நல்லெண்ண தூதராக புதுக்கோட்டை நகருக்கு வந்திருந்தார்.  


புதுக்கோட்டை நகரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் சார்பாக கடந்த 10-03-2018 முதல் 26-03-2018 வரை  நாட்டு நலப்பணிதிட்ட முகாம் நடைபெற்று வருகிறது.நகரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியைத் தேர்ந்தெடுத்து சமூக நலப்பணிகளை செய்துவருகிறார்கள்.

இவர்களுடன் உள்ளூரைச்சேர்ந்த பல்வேறு அரசு சார்பு, மற்றும் தனியார் அமைப்புகளும் நிறுவனங்களும் இணைந்து இந்த நாட்டு நலப்பணி சேவைகளைச் செய்து வருகின்றன.அதன்தொடர்ச்சி நிகழ்வாக  நேற்று (23-03-2018) புதுக்கோட்டை நகர மகாராணி ரோட்டரி சங்கம் இணைந்துக்கொண்டது.இருதரப்பினரும் சேர்ந்து நகரின்  வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரகதாம்பாள் ஆலயத்தை  தூய்மை செய்யும் பணியைச் செய்தார்கள்.

இந் நிகழ்வில் ஜப்பான் நாட்டின் ரோட்டரி அமைப்பின்  நல்லெண்ண தூதுவராக புதுக்கோட்டை நகருக்கு வருகை தந்திருந்த யஷுகிமோ என்பவரும் ஆர்வமுடன் கலந்துக் கொண்டார்.முதலில் மாணவர்கள் சுத்தம் செய்வதை உன்னிப்பாக கவனித்தவர், பிறகு ஒரு மாணவன் கையில் வைத்திருந்த ஒட்டடை கொம்பை வாங்கி, கோவில் விதானத்தில் படர்ந்திருந்த நூலாம்படையை சுத்தம் செய்தார்.அங்கிருந்த மாணவர்களை உற்சாகப்படுத்தினார். ஜப்பான் நாட்டு முறையில் வணங்கினார்.

அவருக்கு கற்றுத்தரப்பட்ட வணக்கம் என்ற தமிழ் வார்த்தையை 'வண்க்கம்'என்று உச்சரித்து கலகலப்பூட்டினார். கோவிலின் சிறப்புகளைப் பற்றிக் கேட்டறிந்தார். சிலைகளை தொட்டுப்பார்த்து வியந்தார். பாறைகளிலேயே சிலைகளுக்கு ஆபரணங்கள் செதுக்கப்பட்டிருப்பதை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு உடன் இருந்தவர்களிடம் சிலாகித்தார்.  கோவிலை ஆர்வமுடன் சுற்றிப் பார்த்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக, கோவில் தூய்மைப் பணியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைப்பற்றியும் மக்களின் அன்பைப் பற்றியும் தான் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததை யஷுகிமோ பேசி,எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில்
சண்முகசுந்தரம், மோகன் ராஜ்  ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மகாராணி ரோட்டரி தலைவர் சுபா மற்றும் நிர்வாகிகள் ஐ.டி.ஐ முதல்வர் ராமர் மேலாளர் சங்கர் பயிற்றுனர்கள் உட்பட ஏராளமானோர்கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!