அரசுப் பள்ளியின் அடடே முயற்சி.. அசத்தும் தலைமை ஆசிரியர்!

ஆசிரியர்கள்

மதுரை, ஒத்தக்கடை தொடக்கப்பள்ளி தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை ஆசிரியர் தென்னவன் மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வி முதல் வருமானம் ஈட்டும் கல்விவரை தொடர்ந்து பயிற்றுவித்துவருகிறார். மனப்பாடம் செய்வது மட்டும் ஒரு மாணவனின் வேலையில்லை என்று தன் முயற்சியாலும் பள்ளி ஆசிரியர்கள் உதவியோடும் பல சாதனைகளைப் படைத்துவருகிறார்.

தென்னவன்

இந்நிலையில் பள்ளி மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்புப் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை நடத்தினார். இதில் தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்து தீர்மானங்களை இயற்றினார். கூட்டத்தில் பள்ளி முன்னேற்றத் திட்டம், பள்ளி வளர்ச்சி, இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம், ஆண்டு விழா போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. 

மாணவ மாணவிகள் தமிழ், ஆங்கிலம் செய்தித்தாள்கள் வாசித்தல், கணக்கில் நான்கு அடிப்படை செயல்பாடுகள், பேச்சு, கதை கூறுதல், பொம்மலாட்டம் முதலியன நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 'சமூகத் தணிக்கை ஆய்வுப் படிவம் 2017-18' படைக்கப்பட்டது. அதில் பள்ளிப் பெயர், வகை, முகவரி, சமூகத் தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பட்டியல், பள்ளிச் சேர்க்கை விவரம், 2013 முதல் 2017 வகுப்புவாரியாக மாணவர்கள் விவரம், விலையில்லாப் பொருள்கள் விவரம், பள்ளி மானியங்கள், பள்ளி உட்கட்டமைப்பு, மதிய உணவுத் திட்டம், தரமான கல்வி, சுத்தம் சுகாதாரம் போன்ற 15 தலைப்புகளில் உட்கூறுகளுடன் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டன. பள்ளி முன்னேற்றத் திட்டத்தின் அடிப்படையில் வருங்காலத்தில் பள்ளி வளர்ச்சி பெற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. 

இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த உறுப்பினர் குழந்தையின் பெற்றோர்கள் முதலியோர் கலந்துகொண்டனர். மாணவி ஆஷாபானு நன்றி கூறினார். கணினி ஆசிரியர் மோசஸ் மாணவர்களுக்கு நீதி போதனைகளை வழங்கினார். தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவிற்கு அரசுப் பள்ளிகள் செயல்படுவதால் முகநூலில் ஒத்தக்கடை அரசுப் பள்ளிக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!