வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (24/03/2018)

கடைசி தொடர்பு:10:51 (24/03/2018)

'காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும்' -அடித்துச் சொல்லும் ஜெயக்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடக்கோரி மத்திய அரசுக்கு, அ.தி.மு.க சார்பில் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

ஜெயக்குமார்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அ.தி.மு.க எம்.பி-க்கள், நாடாளுமன்றத்தின்முன் தொடர்ந்து 15 நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, தமிழகச் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

'குதிரைப்பேரம் நடத்தும் இந்த அரசு, மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. அதனால், நிச்சயமாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்போவதில்லை. இவர்கள், கமிஷன் வாங்குவது, கரப்ஷன் செய்வது போன்ற அடிப்படையில்தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க ஊரையும் தமிழக மக்களையும் ஏமாற்றிவருகிறது' என ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அ.தி.மு.க அரசு மத்திய அரசிடம் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளது. தமிழகம் சார்பில் இதுவரையிலும் எந்தக் கட்சிகளும் இவ்வாறான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்ததில்லை. அதனால், காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும்' என்றார்.