வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (24/03/2018)

கடைசி தொடர்பு:11:27 (24/03/2018)

புதிய கல்விக் கட்டணம் ஏப்ரல் 30க்குள் இணையத்தில் வெளியிட வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு

எந்தவித கட்டுப்பாடும், கண்காணிப்பும் இல்லாமல் கட்டணக் கொள்ளை அடிக்கத் தொடங்கியுள்ள தனியார் பள்ளிகளுக்குக் கிடுக்கிப்பிடி போடும் வகையில், புதிய கல்விக் கட்டண விவரத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்விக் கட்டணம்- உயர்நீதிமன்றம்

இந்த வழக்கைத் தாக்கல் செய்த மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்பு உணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீமிடம் பேசினோம். ``தனியார் பள்ளிகள் வரைமுறை இல்லாமல் மக்களிடம் வசூலிக்கும் அளவுக்கதிகமான கல்விக் கட்டணத்தை நெறிப்படுத்த வேண்டி கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டி அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான குழு, 2017 - 2018 கல்வியாண்டுக்கான கட்டண விவரத்தை அறிவித்தது. ஆனால், 2018 முதல் 2021 வரையிலான கல்வி ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் தனியார்கள் நடத்தும் நர்சரி மற்றும் தொடக்க, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் 7,600 உள்ளன. பெரும்பாலான பள்ளிகள் இப்போதே அட்மிஷன் போடத் தொடங்கிவிட்டார்கள். இஷ்டம்போல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

ஒரு பள்ளியின் கட்டணம் எவ்வளவு, எவ்வளவு வசூல் செய்கிறார்கள் என்ற விவரத்தைப் பள்ளிகள் தெரிவிப்பதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், பொதுமக்கள் நலன் கருதி புதிய கல்விக்கட்டணம் அறிவிக்கும் வரை மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன், இதை விசாரித்த நீதிபதிகள், தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரத்தை வருகிற 30ம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்கள்'' என்றார்.

தனியார் பள்ளிகள் கடந்த கல்வி ஆண்டில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்ததாகவும், அதைப்பற்றிய புகார்களை அதிகாரிகள் விசாரிக்கவில்லை என்றும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க