வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (24/03/2018)

கடைசி தொடர்பு:14:00 (24/03/2018)

`பழனிசாமி ஆட்சி ஓராண்டு நடைபெற்றதே மிகப்பெரும் சாதனைதான்'- சீமான் கலகல

``காவிரி மேலாண்மை வாரியத்தை ஆளும் பா.ஜ.க. அரசும் அமைக்காது. காங்கிரஸும் அமைக்காது. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமையவே அமையாது” என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஓராண்டு நடைபெற்றதே மிகப் பெரும் சாதனைதான். பெரு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறி வருகிறது தமிழகம். இந்த ஆட்சி சாமானிய மக்களுக்கான ஆட்சியே அல்ல. பெருமுதலாளி வர்க்கத்தினருக்கான ஆட்சியாகத்தான் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை ஆளும் பா.ஜ.க. அரசும் அமைக்காது. காங்கிரஸும் அமைக்காது. கர்நாடக மாநில தேர்தலில் வெற்றிக்காகப் பா.ஜ.க., மௌனம் காக்கிறது. அனைத்துக்கட்சிகளும் இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூட்டம் நடத்தி உள்ளன இதனால் எந்தப் பலனும் இல்லை.  தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமையவே அமையாது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்காக எதிர்த்துத் தொடர்ந்து போராடுவோம். இப்படிப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். இப்படிச் சிரிப்பவர்கள் ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல நெடுவாசல், கதிராமங்கலத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரைக் குடித்து பார்க்கட்டும்.  இந்த ஆலையின் தீமைகள் பற்றி சமீபகாலமாக பொது மக்கள் அனைவரின் மத்தியில் நல்ல விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இனியும் இந்த ஆலை இயங்க முடியாது. மக்கள் ஆலைக்கு எதிராக ஒன்று கூடிவிட்டனர்.   

இந்த ஆலை விரிவாக்கத்துக்கான  அனுமதியை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சுற்றுப்புறத்தையும் நிலத்தையும் மாசுபடுத்தியும், மக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வரும் இந்த ஆலையும் இனி இயங்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான பேரணிக்குக் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மக்கள் போராட்டம் வெற்றி பெறும். இதற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க