'எதிர்க்கட்சிகளின் செயலால் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது'- தமிழிசை மகிழ்ச்சி பேட்டி

``ராம ராஜ்ஜிய ரதம் வந்தபோது எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தன. அது, எங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற உதவியது" என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மகிழ்ச்சியுடன் கூறினார்.

புதுக்கோட்டை நகரில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆறு சட்டமன்ற பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை இன்று காலை வந்தார். அவரை வரவேற்று புது பஸ் ஸ்டாண்டில்  பா.ஜ.க.வினர்  வைத்த பேனரை அதிகாலையில் மர்ம நபர் யாரோ கிழித்துவிட்டதாக பரபரப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்ட பேனரை போலீஸ் உடனடியாக அப்புறப்படுத்தி விட்டது. போலீஸ் மற்றும் நகராட்சி அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர் என்பதால், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதனைக் குறித்து தமிழிசை ஏதும் கருத்துக் கூறாமல் எஸ்கேப் ஆனார்.

தமிழிசை

கடந்த வாரம்தான் ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைப்பு சம்பவம் நடந்து பெரும் பரபரப்பு நிலவியது.  அதற்குள் மற்றொரு பரபரப்பான சம்பவம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலையில் அரங்கேறியது. நகரெங்கும் தமிழிசையை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில், இரண்டு பேனர்கள் பேருந்து நிலைய வளாகம் அருகில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அதற்கு முறையாகப் பெறவேண்டிய போலீஸ், நகராட்சி அனுமதியைக் கட்சியினர் பெறவில்லை. அதில் ஒன்றை யாரோ விசமிகள் கிழித்து வைக்க, நகர பாஜக வினருக்குத் தகவல் பறந்தது. இன்னும் சிலமணி நேரத்தில் தமிழிசை நகருக்குள் வரும் நிலையில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அங்கே ஆர்ப்பாட்டம் மறியலில் ஈடுபடவும் முடிவெடுத்தனர். தகவல் புதுக்கோட்டைக்கு வந்துகொண்டிருந்த தமிழிசைக்குத்  தரப்பட்டது. ஆனால் அவர், 'முதலில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை முதலில் நடத்தி விட்டு ஆர்ப்பாட்டம் பற்றி முடிவெடுத்துக்கொள்ளலாம்' என்றாராம். பத்து மணிக்குப் புதுக்கோட்டை வந்தவர், நகரில் உள்ள ரோஜா இல்லத்தில் ஒருமணி நேரம் தங்கி கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை செய்தார். கிழிக்கப்பட்ட பேனர் அனுமதியின்றி வைக்கப்பட்டது என்பதை அறிந்த தமிழிசை கட்சியினரைக் கடிந்துகொண்டிருக்கிறார். பிறகு 11 மணிக்குப் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ``தாமரை யாத்திரை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பயணப்பட்டு வருகிறேன். உள்ளாட்சி தேர்தலுக்கு எங்கள் கட்சியின் தொண்டர்களைத் தயார்படுத்தவே வந்திருக்கிறேன். ராம ராஜ்ஜிய ரதம் வந்தபோது எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தன. அது, எங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற உதவியது. மக்களின் அந்த எழுச்சியை வைத்து உறுதியாக ஒரு விசயத்தை நான் சொல்லமுடியும். தமிழகத்தில் நிச்சயமாக ராம ராஜ்ஜியம் அமையும். ஆளுநரை 'இவர் புரோகித்தா.. இல்லை, புரோக்கரா?'என்று நாகரிகமற்ற முறையில் வைகோ விமர்சிக்கிறார். அவர்தான் திமுகவுக்கு புரோக்கர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நாவடக்கம் வேண்டும்.

காவிரி பிரச்னையில் விரைவில் மத்திய அரசு 9 பேர்கொண்ட குழுவை அமைக்க உள்ளது. இந்தக் குழுவிற்கு அதிகாரம் உள்ளதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பயிர்பாதுகாப்பு திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை.  பயிர்காப்பீடு திட்டம் செயல்படுத்துவதுக் குறித்தும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் தமிழகத்தில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.பாஜக விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் பாஜகவினர் மீது வன்முறை நடந்தால் யாரும் குரல் கொடுப்பதில்லை. அதனால் எங்களைத் தற்காத்து கொள்ளவே பாஜகவினர் மீது கை வைத்தால் கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துப் பேசினேன்.

தமிழக அரசு ஓராண்டை பல கண்டங்களை தாண்டிக் கடந்துள்ளது. அதுவே பெரிய சாதனைதான். அதற்காகத்  தமிழக முதல்வருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். அதேசமயம், இந்த ஆட்சியில் நிறைகள் இருந்தாலும் குறைகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக, லஞ்சம் அதிக அளவு உள்ளது. உள்ளாட்சித்தேர்தலை தமிழக அரசு நடத்தாதது, தமிழகம் முழுவதும் உள்ள  நீர்நிலைகளை முறையாகத் தூர்வாராதது ஆகியவை பொதுக் குறைகளாக உள்ளது. அவற்றை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயலலிதா இருந்த போது, அவரது ஆளுமை அதிகம் இருந்தது. அவரைபோல  அவர்கள் வழியில் ஆட்சியை நடத்த தற்போதுள்ள முதல்வரும் துணை முதல்வரும் முயற்சி செய்து பார்க்கிறார்கள். கமல், ரஜினி பற்றி நான் ஏற்கெனவே கூறிய கருத்தைத்தான் இப்போதும் கூறுகிறேன். யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம். கட்சித் தொடங்கலாம். ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு அவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது. பொதுமக்கள் பிரச்னைகளை அவர்கள் எப்படி அணுகுகிறார்கள்  என்பதைப் பொறுத்தே விமர்சனங்கள்  கூற முடியும்'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!