கேரளாவில் ஆளில்லாமல் அமைதியாகச் சென்ற ரத யாத்திரை! | Rama Rajya Ratha Yathra reached kerala

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (24/03/2018)

கடைசி தொடர்பு:15:00 (24/03/2018)

கேரளாவில் ஆளில்லாமல் அமைதியாகச் சென்ற ரத யாத்திரை!

ரதயாத்திரை

ராம ராஜ்ஜிய ரதயாத்திரைக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் நூற்றுக்கணக்கானோர் புடைசூழ ஊர்வலமாகச் சென்ற ரதம் கேரளாவில் 15 பேருடன் அமைதியாகக் கடந்து சென்றது.

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கடந்த 20ம் தேதி நெல்லை மாவட்டம், செங்கோட்டை வழியாகத் தமிழகத்துக்குள் நுழைந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும், ராமராஜ்யம் உருவாக்க வேண்டும், ராமாயணத்தைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் வரும் ரத யாத்திரையைத் தமிழகத்துக்குள் நுழையவிடக் கூடாது எனச் சட்டசபையில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் நிற்காமல் சட்டசபைக்கு வெளியேயும் அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தி கைதானார்கள். செங்கோட்டையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. ரத யாத்திரைக்குப் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தின் அனைத்து ஊடகங்களின் பார்வையும் ரத யாத்திரை பக்கம் திரும்பியது. தமிழகத்தில் ரதம் சென்ற நான்கு நாள்களும் ஊர்வலத்துடன் நூற்றுக்கணக்கானோர் பைக்குகளில் சென்றனர். அதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ரதத்துக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில் ரதம் தமிழகத்தில் பயணத்தை முடித்துவிட்டு நேற்று கேரள மாநிலத்துக்குச் சென்றது. கேரளாவில் பாதுகாப்புக்காக ஒரு காவல்துறை வேன் வந்திருந்தது. 15க்கும் குறைவான கேரள விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் வந்திருந்தனர். தமிழகத்திலிருந்து சென்ற நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ரதத்தை வழியனுப்பிவிட்டுத் திரும்பிச்சென்றனர். கேரளாவில் சுமார் 15 நிர்வாகிகளுடன் அமைதியாக ஊர்வலம் சென்று திருவனந்தபுரத்தில் நிறைவுபெற்றது. ''எந்த ஊடகங்களும் ரத ஊர்வலத்தை லைவ்வாக ஒளிபரப்பவில்லை. ஆனால், தமிழகத்தில் வீணாக இந்த ரதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் இலவச விளம்பரம் தேடி கொடுத்துவிட்டனர் என்பதுதான் உண்மை'' என்றனர் சமூக ஆர்வலர்கள்.