'இதுபோன்ற செயல்பாடுகள் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது'- எச்சரிக்கும் ரஜினி மக்கள் மன்றம் | statement has released by raju mahalingam for rajini makkal mandram members

வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (24/03/2018)

கடைசி தொடர்பு:15:06 (24/03/2018)

'இதுபோன்ற செயல்பாடுகள் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது'- எச்சரிக்கும் ரஜினி மக்கள் மன்றம்

திண்டுக்கல் மாவட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுங்கள் என, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ரஜினி

மன்றக் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாகக் கூறி திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் தம்புராஜை பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி கடந்த 22ம் தேதி அறிக்கை வெளியிட்டது ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் 147 பேர் மொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாக திண்டுக்கல் மாநகர செயலாளர் ஜோசப் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பு தம்புராஜுக்கு வழங்கப்பட்டது. அப்படிப்பட்ட பொறுப்புகள் சில ஊடகங்களில் சொல்லப்படுவதைப்போல் எவருடைய நிதிநிலையையும் பார்த்து வழங்கப்பட்டதல்ல என்ற உண்மை இதுவரை நியமிக்கப்பட்ட நகர, ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலைப் பார்த்தாலே புரியும். அவர், ரசிகர் மன்ற மூத்த உறுப்பினர்களுள் ஒருவர் என்பதால்தான் அந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்ட அனைவரையும் அழைக்காமல், தன்னுடைய சுய விருப்பு, வெறுப்புக்கு இடம் கொடுத்து, தனக்கு விருப்பமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தார் தம்புராஜ்.

இதை அறிந்து தலைமை அவரைத் தொடர்பு கொண்டபோது, அவர் சரியான விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. நியமனம் செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகளுடன் ஒற்றுமையாகச் செயல்படுமாறு அவரைத் தலைமை அறிவுறுத்தியது. ஆனால், தலைமையின் அறிவுறுத்தலையும் மீறி, நம் அன்புத்தலைவர் நியமித்த சிலரை ஒதுக்கிவிட்டு, மற்ற நிர்வாகிகளைக் கொண்டு ஊழியர் கூட்டம் நடத்தி, மன்றக் கட்டுப்பாட்டுக்கு விரோதமாகச் செயல்பட்டார் தம்புராஜ். தவிர, மாவட்ட வாரியாக தலைமை ஆய்வுப் பணிக்காக மன்ற நிர்வாகிகளை சென்னை தலைமை மன்றத்துக்கு இரண்டு முறை அழைத்தபோதும், மாவட்டச் செயலாளரான தம்புராஜ் நேரில் வராமல், வேறொருவரை அனுப்பி வைத்தார். தன்னலமற்ற மக்கள் சேவை என்ற புனிதமான உயர்ந்த எண்ணத்தோடும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தில், இதுபோன்ற செயல்பாடுகள் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது" என்று கூறப்பட்டுள்ளது.