வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (24/03/2018)

கடைசி தொடர்பு:17:00 (24/03/2018)

தொடரும் ரத யாத்திரை சர்ச்சை! - பேரணியாகச் சென்ற 320 பேர் மீது வழக்கு

ராம ராஜ்ய ரத யாத்திரை சென்ற போது, நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்த 320 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 75 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரத யாத்திரை

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும், இந்தியாவில் ராம ராஜ்யம் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமராஜ்ய ரத யாத்திரை பிப்ரவரி 13-ம் தேதி அயோத்தியில் தொடங்கியது. உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக கடந்த 20-ம் தேதி செங்கோட்டை வழியாக இந்த ரதம் தமிழகத்துக்குள் நுழைந்தது. இந்த ரதத்தைத் தமிழகத்தில் அனுமதிக்க பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், யாத்திரை காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில், நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்தார். ஆனால், யாத்திரையின் முன்னும் பின்னுமாக ஏராளமானோர் பைக்குள் மூலமாகப் பின் தொடர்ந்தார்கள். செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி வழியாகச் சென்ற யாத்திரை ராமநாதபுரத்திலிருந்து மீண்டும் தூத்துக்குடி வழியாகக் குமரி மாவட்டத்துக்குச் சென்றது.

அப்போது, நெல்லை மாவட்ட எல்லையான கே.டி.சி நகர்ப் பகுதியில் பா.ஜ-வினரும் இந்து அமைப்பினரும் வரவேற்பு அளித்தனர். அதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்ட 320 பேர் மீது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதுவரை 75 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

தடையை மீறிய வரவேற்பு

ரத யாத்திரையின் போது தடை உத்தரவை மீறி பொது இடத்தில் கூடி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது 143 (சட்ட விரோதமாகக் கூடுதல்) 184, 188 (பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்), 283 (பொது வழித்தடத்தில் தடங்கலை ஏற்படுத்துதல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.