அறுவடைக்குத் தயாரான புடலங்காய்கள் விலை குறைந்ததால் விவசாயிகள் விரக்தி..!

நாகை மாவட்டம், திருக்கடையூர் பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள புடலங்காய்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில் காய்கறிச் சந்தையில் அவற்றின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருக்கடையூர் அருகே உள்ள சிங்கனோடை, பிள்ளை பெருமாள் நல்லூர், டி.மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளிலும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் விவசாயிகள் அதிக அளவில் புடலங்காய் சாகுபடி செய்துள்ளனர். சாகுபடி செய்யப்பட்ட காய்கள் வளர்ந்து தற்போது அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ளது. இந்தநிலையில்  திடீரெனச் சந்தையில் அவற்றின் விலை குறைந்துள்ளது. இதனால் புடலங்காய் சாகுபடி செய்தவர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

இதுபற்றி திருக்கடையூர் பகுதி விவசாயிகளிடம் கேட்ட போது, "இந்தப் பகுதியில் விவசாயம்தான் பிரதான தொழிலாக உள்ளது. நாங்கள் ஆண்டுதோறும் பெரும்பாலான இடங்களில் புடலங்காய் சாகுபடி செய்து வருகிறோம். கொடி வகை தாவரமான புடலங்காய் மூன்று மாத கால பயிராகும். புடலங்காய் வேகமாக வளரக்கூடியது. நாங்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புடலங்காய் சாகுபடி செய்தோம். தற்போது அந்தக் காய்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ளது. போதிய அளவு மழை பெய்யாததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாலும் புடலங்காய் சாகுபடியில் மகசூலும் குறைந்து, விலையும் குறைந்துவிட்டது. தற்போது உள்ள தலைமுறையினர் புடலங்காயை விரும்பிச் சாப்பிடாததால் மார்கெட்டில் விற்பனையும் குறைந்து, விலையும் சரிந்துவிட்டது. இதனால் விளைந்த புடலங்காய்களைக் கூட அறுவடை செய்ய மனமில்லாமல் கவலையுடன் உள்ளோம்" என்று கூறினர்.

புடலங்காய்கள் அறுவடை செய்வதற்கு ஏற்ற பக்குவத்தில் வளர்ந்துவிட்டதால் தற்போது அறுவடை செய்யவில்லை என்றாலும் காய்கள் முற்றிய நிலைக்குச் சென்றுவிடும். முற்றிய நிலையில் காய்கள் சந்தையில் விலை போகாது. ஆனால், தற்போது அறுவடை செய்து விற்றாலும் நஷ்டமே ஏற்படும் என்பதாலும், தங்களது மூன்று மாத கால உழைப்பு வீண்போனதாலும் இப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் சோகத்தில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!