வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (24/03/2018)

கடைசி தொடர்பு:18:00 (24/03/2018)

மணலைத் தொடர்ந்து சரளைக் கல்! - கரூரில் கொடிகட்டிப்பறக்கும் கடத்தல்

சரளைக் கல் கடத்தல்

கரூர் மாவட்டத்தில் காவிரியில் மணல் கடத்தல், சரளைக் கல் கடத்தல், கிராவல் மண் கடத்தல் என்று பல்வேறு கடத்தல் நடைபெற்று வருகிறது. ``இந்தக் கடத்தலின் அடுத்த எபிசோடாக விலை உயர்ந்த வெள்ளைக்கற்களை அரசு புறம்போக்கு நிலங்களில் வெட்டிக் கடத்துகிறார்கள். இதைத் தடுப்பார் யாருமில்லை" என்று வேதனைத் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கரூர் டு ஈசநத்தம் போகும் சாலையில் பைபாஸை தாண்டி இருக்கும் கோடங்கிப்பட்டிக்கு மேற்கே கருவேலம் மரங்கள் மண்டிப் போய் இருக்கிறது அரசுப் புறம்போக்கு நிலங்கள். ஆள் அரவம் இல்லாமல் இருக்கும் இந்த இடத்தில் சில அடிகள் வரை தோண்டினாலே விலை உயர்ந்த வெள்ளைக்கற்கள் கிடைக்கின்றன. இதைத் தெரிந்து கொண்ட கடத்தல்காரர்கள் ஆங்காங்கே குழிகளைத் தோண்டி, வெள்ளைக்கற்களைக் கடத்துவதாகச் சொல்கிறார்கள்.

சரளைக் கல்

இது சம்பந்தமாக, சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடம், ``கரூரில்தான் தமிழ்நாட்டிலேயே அதிக அளவு மணல் கடத்தல் நடக்கிறது. காவிரி, அமராவதின்னு இங்கு ஓடும் விவசாய ஜீவாதாத ஆறுகளில் களிமண்ணைத் தாண்டித் மணலை அள்ளி, மொட்டையாக்கிவிட்டார்கள். போதாக்குறைக்கு ஆங்காங்கே கிராவல் மண், சரளை மண் என்று கிடைக்கும் இடங்களில் எல்லாம் மண்ணை அள்ளி, கடத்தல்காரர்கள் கோடிகோடியாகச் சம்பாதித்துவிட்டார்கள். இந்த மாவட்ட கனிமவளத்துத்துறை அதனைத் தடுக்காமல், கடத்தல்காரர்களுக்குத் துணைபோய் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்து விலை உயர்ந்த வெள்ளைக்கல்லை வெட்டிக் கடத்த தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் கல் பளிங்குக் கல் போலேவே இருக்கும். இந்தக் கல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாக உகந்த கல்லாக இருக்கிறது. சில நாடுகளில் இந்தக் கல்லை விரும்பி வாங்குறாங்க. அதனால், இந்தக் கல் இங்குள்ள புறம்போக்கு அரசு நிலங்களில் சில அடிகள் தோண்டினாலே கிடைப்பதைக் கண்டுபிடித்த கடத்தல் கும்பல், எந்தவித தடையும் இல்லாமல் வெட்டிக் கடத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணுகிறது. இதைத் தடுப்பார் யாருமில்லை. நாங்கள் இதைத் தடுக்கச் சொல்லி கனிமவளத்துறைக்குப் புகார் கொடுத்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், நாங்க இந்தக் கடத்தலை கண்டித்துப் போராட்டம் நடத்தவிருக்கிறோம்" என்றார்கள்.