வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (24/03/2018)

கடைசி தொடர்பு:18:20 (24/03/2018)

பெண்களின் நலனுக்காக விழிப்புஉணர்வு மாரத்தான்.. அமெரிக்கத் தம்பதி பங்கேற்பு!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன் கொடுமைகள் குறித்தும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கத் தம்பதியினர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

விழிப்புஉணர்வு மாரத்தான்

நாடு முழுவதும் மகளிருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தபடியே இருக்கின்றன. பணிக்குச் செல்லும் இடங்களிலும், வறுமை காரணமாக கொத்தடிமைகளாக வேலை செய்யும் இடங்களிலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக இருக்கின்றன. இது குறித்து பொதுமக்களிடம் விளக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான், அவரது மனைவி சூசன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த காட்ஃப்ரே, மெல்வின் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

ஏற்கெனவே, மும்பை முதல் சென்னை வரையிலும் 1,600 கி.மீ தூரத்துக்கு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற இந்தக் குழுவினர் இரண்டாவது கட்டமாக கடந்த 10-ம் தேதி சென்னையிலிருந்து கேரளாவின் கோவளம் வரையிலும் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கினார்கள். விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லை வந்த இந்தக் குழுவினர் கோவளம் நோக்கி தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். இந்தக் குழுவினருக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த ஓட்டம் குறித்து பேசிய குழுவினர், ’’இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 2 மில்லியன் பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என ஐ.நா அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அதனால், 2 மில்லியன் ஸ்டெப்ஸ் என்கிற மாரத்தானை மும்பை முதல் சென்னை வரை நடத்தினோம். தற்போது சென்னை முதல் கோவளம் வரை மாரத்தான் ஓட்டமாகச் செல்கிறோம். 

வழிநெடுகிலும் இருக்கும் பள்ளிகளில் உள்ள மாணவர்களைச் சந்திக்கிறோம். அத்துடன், கிராமங்களில் பெண்களைச் சந்தித்து விழிப்புஉணர்வு கருத்துகளை எடுத்துக் கூறுகிறோம். ஒவ்வொரு நாளும் 50 கி.மீ தூரத்துக்குப் பயணம் செய்த நாங்கள் 16 நாளில் இந்தப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளோம். இந்தப் பயணம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் ஏற்படுத்தியிருக்கிறது’’ என்றார்கள்.