ரதயாத்திரையில் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு!

ரதயாத்திரை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையின்போது பொதுக்கூட்டம் நடத்தியதாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தொடங்கி ராம ராஜ்ஜிய ரத யாத்திரை பல மாநிலங்கள் வழியாகச் சென்று இறுதியாகத் தமிழகம் வந்தது. தமிழகத்தில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த நிலையில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை உத்திரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கி  மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரள மாநிலம் வழியாகப் பயணித்து இறுதியில் ராமேஸ்வரத்தில் நிறைவடையும் என அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், ராம ரதம் ராமேஸ்வரத்தில் வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரி மாவட்டம் வந்தது. கன்னியாகுமரி மாவட்டம் செட்டிக்குளத்தில் ரத யாத்திரை வருகையையொட்டி பொதுக்கூட்டம் நடத்த இந்து அமைப்பினர் அனுமதி கேட்டனர். ஆனால், போலீஸார் அனுமதி மறுத்ததுடன் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது என நாகர்கோவில் நகர பா.ஜ.க. தலைவர் நாகராஜன் வீட்டில் போலீஸார் நோட்டீஸ் ஒட்டினர்.

ராமரத யாத்திரை

இந்த நிலையில் கடந்த 22ம் தேதி இரவு நாகர்கோவில் செட்டிக்குளத்தில் ராம ரத யாத்திரை வந்ததும் அங்கு தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது மறுநாளான 23ம் தேதி வில்லுக்குறி, தக்கலை ஆகிய பகுதிகளிலும் இந்து அமைப்பினர் திரண்டு ரதத்துக்கு வரவேற்பு அளித்தனர். ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு போலீஸ் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடையை மீறிக் கூடியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் வேலுப்பிள்ளை உள்ளிட்ட நூறுபேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டாறு காவல் நிலையத்தில் நாகர்கோவில் நகர பா.ஜ.க. தலைவர் நாகராஜன் தலைமையில் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டாறு போலீஸில் எத்தனைபேர் என குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யவில்லை. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை ரதத்திற்கு வரவேற்பு கொடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!