`சசிகலா சொன்னதெல்லாம் பொய்' - சொல்கிறார் மனோஜ் பாண்டியன்

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்? விசாரணை முடிவில் உண்மையான குற்றவாளிகள் அனைவரும் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் தெரிவித்தார். 

மனோஜ் பாண்டியன்

நெல்லை சந்திப்புப் பேருந்து நிலையத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த சாதனை விளக்கப் புகைப்படக்  கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடங்கி வைத்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி மற்றும் அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான மனோஜ் பாண்டியன் ஆகியோர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மனோஜ் பாண்டியன், ``தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் நடவடிக்கை சரி என்பதும் நீதிமன்ற தீர்ப்பில் தெரியவரும். முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மரணம் மர்மமான முறையில் நடந்துள்ளது. அதன் காரணமாகவே விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது மரணத்துக்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் விசாரணையின் முடிவில் உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். .

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய். சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தார்கள் என்றும் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர ராவ் பார்த்தார் என்பதும் பொய்யான தகவல். பொய் பேசுபவர்கள் ஆணையத்தின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு விடுவார்கள். விசாரணையின் முடிவில் பல்வேறு உண்மைகள் வெளியே வரும்’’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!