'தமிழிசை கூறிவருவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது'- அமைச்சர் கடம்பூர் ராஜு கிண்டல்

``எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு கூட தகுதியில்லாதவர் ஸ்டாலின். அவருக்கு அதற்கான அருகதையில்லை. அவர் எப்போதுமே கனவு முதல்வர்தான்" என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜீ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் அருகில் தமிழக அரசின் சாதனை விளக்க ஒளிப்படக் காட்சி மற்றும் புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்து தமிழக அரசின் சாதனை விளக்க மலரினையும் பொதுமக்களுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ``தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என  தமிழிசை கூறிவருவது வேடிக்கையாகத்தான் உள்ளது. கட்சியை வைத்திருப்பவர்கள் எல்லோரும், ஆட்சியைப் பிடிக்கும் என்று கூற உரிமை உண்டு. அதன் அடிப்படையில் அவர் அப்படிச் சொல்லி வருகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முதல்வரும், துணை முதல்வரும் சட்டமன்றத்தில் விரிவாகக் கூறியுள்ளனர். இன்னும் 5 நாள்கள் உள்ளது. இப்பிரச்னைக்காக அ.தி.மு.க. எம்.பி-க்கள் 14 நாள்கள் நாடாளுமன்றத்தினை முடக்கியுள்ளனர். நிச்சயமாக தமிழகத்திற்கு நல்ல தீர்வு வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்குகூட தகுதியில்லாதவர். அவருக்கு அதற்கான எந்த அருகதையும் இல்லை. ஜெயலலிதா மறைந்தவுடன் இந்த ஆட்சி நீடிக்காது கலைந்து விடும் எனக் கனவு கண்டார் ஸ்டாலின். ஆனால், அதையும் தாண்டி இந்த அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது ஸ்டாலினுக்குப் பொறுக்கவில்லை. அவர் எப்போதும் கனவு முதல்வர்தான். அவரது கனவு துளியும் பலிக்காது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி அரசு கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க ஒருபோதும் தயக்கம் காட்டியது கிடையாது.  தி.மு.க தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. சின்னம் இல்லாமல் இருந்தபோதும், இருக்கும் போதும் தேர்தலை கண்டு பயந்ததும் கிடையாது.  விரைவில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலும் நடைபெறவுள்ளது. எந்தத் தேர்தலைப் பற்றியும், பயப்படாத கவலை கொள்ளாத இயக்கம் அ.தி.மு.க." எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!