வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (24/03/2018)

கடைசி தொடர்பு:20:30 (24/03/2018)

'சேலம் டு சென்னை விமான சேவை நாளை தொடக்கம்!' - மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது

சேலம் டு சென்னை விமான சேவை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் அருகே 1993ம் ஆண்டு165 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஆனால், விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை இங்கு தொடங்க முன்வராததால் இந்த விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இங்கு விமான சேவை தொடங்க வேண்டும் என்பது சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு. அது நிறைவேறும் வகையில் நாளை சேலம் விமான நிலையம் திறப்பட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

சேலம் விமான நிலையம் தொடங்கிய காலத்திலிருந்து விமானம் இயக்கப்படாமல் இருந்து வந்தது. பிறகு பல தரப்பினரும் முயற்சிகள் மேற்கொண்டு 2009ம் ஆண்டு என்.இ.பி.சி. என்ற நிறுவனம் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கியது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், அந்த சேவை விரைவிலேயெ முடிவுக்கு வந்தது. அதையடுத்து உள்ளூர் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் விமான நிலையத்துக்கு உயிரூட்டும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டதால் 2009-ம் ஆண்டு நவம்பர் 15 ம் தேதி தனியார் விமான நிறுவனம் கிங்பிஷர் விமான சேவையைத் தொடங்கியது. சேலம் டு சென்னை, சென்னை டு சேலம் செல்ல ஒரு நபருக்கு 3,000 ரூபாய் வசூலித்தது. பயணச் செலவு அதிகமாக இருப்பதால் படிப்படியாக விமானத்தில் பயணிக்க ஆர்வம் குறைந்தது. அதையடுத்து 2010-ம் ஆண்டில் அடியோடு விமான சேவையை ரத்து செய்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தனிப்பட்ட முயற்சி எடுத்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு நாளையிலிருந்து சேலம் விமான நிலையம் விமான சேவை தொடங்கவிருக்கிறது. இதற்கு ட்ரூஜெட் விமான நிறுவனம் தன் பயணியர்  சேவையைத் தொடங்க முன்வந்திருக்கிறது. சென்னையிலிருந்து காலை 9.50-க்குப் புறப்படும் விமானம் சேலத்துக்கு 10.40 மணிக்கும், மறுமார்க்கத்தில் சேலத்திலிருந்து காலை 11 மணிக்குக் கிளம்பி 11.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது. ஒருவழிப் பயணத்திற்கு ஒருவருக்கான கட்டணமாக ரூ.1,499 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 72 பயணிகள் செல்லும் வகையிலான சிறிய ரக விமானம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

பனிப்பொழிவு, மேகக் கூட்டம் மற்றும் மழைக்காலங்களில் விமானத்தை பத்திரமாக தரையிறக்க வசதியாக அதிகத் தொலைவிற்கு ஒளிரக்கூடிய 102 நவீன விளக்குகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. பயணியர் அறை, விமானம் குறித்த தகவல்களை அறியும் வகையில் டிஜிட்டல் திரை, பயணிகளின் உடைமைகளைக் கொண்டு செல்லுவதற்கு வாகனம், விமான நிலையத்தின் பாதுகாப்புப் பணிக்கு ஒரு இன்ஸ்பெக்டர், 12 சப்- இன்ஸ்பெக்டர், 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்த விமான நிலையத்தை நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன. அதை சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க