வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (24/03/2018)

கடைசி தொடர்பு:12:44 (25/03/2018)

நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்!

நாதெள்ளா

வங்கிகளை ஏமாற்றும் நகைக்கடைகள் வரிசையில் லேட்டஸ்ட் நாதெள்ளா ஜுவல்லரி. போலியான ஆதாரங்கள் காட்டி 250 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் விட்டுவிட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பில் புகார் கொடுத்திருக்கிறது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. 

2010-ம் ஆண்டு இந்த 250 கோடி ரூபாயை கடனாக வாங்கியதாக வங்கி சொல்லும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பண நெருக்கடியால் தனது அனைத்துக்கிளைகளையும் மூடியது  நாதெள்ளா நிறுவனம். 77 ஆண்டுக்கால பாரம்பரிய நிறுவனமான நாதெள்ளாவில் அப்போதே நகை சேமிப்புத் திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் தெரிவித்தனர். நாதெள்ளா நிறுவனம் 210 பேரிடம் 75 கோடி ரூபாய் நகை சீட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியுள்ள இந்த புகார் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில்தான் பாரத் ஸ்டேட் வங்கியின் 250 கோடி ரூபாய் புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர்மாதம் தான் தங்களுக்கு போலியான ஆவணங்கள் மூலம் கடன்பெற்றிருப்பது தெரியவந்ததாக சொல்கிறது பாரத ஸ்டேட் வங்கி. நாதெள்ளா மீதான புகாரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே எஸ்.பி.ஐ கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

2017-ம் ஆண்டு நகை சீட்டு மோசடி அம்பலமானபோது, பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் ஆணையம் முன்பு ஆஜரான நாதெள்ளா நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டிய பணத்தை தந்துவிடுவோம் என உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரை வாடிக்கையாளர்களின் பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை.

நாதெள்ளா நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரங்கநாத குப்தா, அவரது மகன்கள் பிரபன்ன குமார், பிரசன்னா குமார், இவர்களது உறவினர் கோட்டா சுரேஷ் ஆகியோர் மீது கடந்த அக்டோபர் மாதம் போலீஸ் வழக்குப்பதிவு செய்ததே தவிர கைது செய்யவில்லை. இப்போதும் இவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்கிற விவரம் வெளியாகவில்லை.

தொடர்ந்து நகை நிறுவன மோசடிகள் வெளிச்சத்துக்கு வரும் நிலையில் வங்கிகளின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த 2016 மார்ச் மாதம் 7.8 சதவவிகிதமாக இருந்த வாராக்கடன் டிசம்பரில் 9.1 சதவிகிதமாக அதிகரித்தது.திருத்தி அமைக்கப்பட்ட கடன் அளவையும் சேர்த்தால், வாராக் கடன் அளவு 12 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கும். வளரும் நாடுகளில் வாராக் கடன் அதிகமாக இருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. வரும் காலங்களில் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைத்துக்கொண்டாலும், வங்கிகளின் நிதி நிலைமை சீரடைய இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும்.

இந்த வாராக்கடன்களில் முன்னணியில் இருப்பது பொதுத்துறை வங்கிகள்தான். பொதுத்துறை வங்கிகளில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் வாராக்கடன் இருக்கும் நிலையில், தனியார் வங்கிகளில் வாரக்கடனின் அளவுக்கு 1.5 சதவிகிதத்துக்குள்தான் இருக்கிறது. 2012 முதல் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் சதவிகிதம் உயர்வதற்கு பொருளாதார மந்த நிலை மிக முக்கியக் காரணம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

நகைச் சீட்டுகள் வேண்டாம்!

மக்கள் நகைக்கடைகளில் சீட்டு கட்டும் பழக்கத்தை கைவிடவேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். நகைக்கடையில் நகை சீட்டு மோசடி நடந்தால் திரும்ப பணம் கிடைப்பது என்பது எட்டாக் கனிதான் என்கிறார்கள். தங்க நகை சேமிப்புத் திட்டத்துக்கு பதிலாக கோல்ட் இடிஎஃப், தங்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டம், மத்திய அரசின் சேமிப்புத் திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இந்த திட்டங்களில் ஏமாற்றமுடியாது என்பதோடு மிகவும் வெளிப்படையான திட்டங்கள் இவை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்