வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (25/03/2018)

கடைசி தொடர்பு:12:19 (22/06/2018)

அன்வர்ராஜா மகன் மீது ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடமும் பெண் ரேடியோ ஜாக்கி புகார்...!

அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா மகன் நாசர் அலி, என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார் என்று புகார் கூறிய ரேடியோ ஜாக்கியான பிரபல்லா சுபாஷ் என்ற இளம்பெண் இன்று ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு தாக்கல் செய்தார்.

பிரபல்லா சுபாஷ்

சென்னை மடிப்பாக்கம் ராம்நகரைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா. சென்னை வானொலியில் தொகுப்பாளராகப் பணியாற்றி வரும் இவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக அன்வர் ராஜா எம்.பி-யின் மகன் நாசர் அலி மீது சென்னை போலீஸ் கமிஷனர். அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், பனைக்குளம் ஜமாத் நிர்வாகத்திடமும் புகார் அளிக்குமாறு கமிஷனர் அலுவலக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, நேற்று (24/03/2018) ராமநாதபுரம் வந்த பிரபுல்லா சுபாஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். மேலும் நாசர் அலிக்கு நாளை திருமணம் நடக்க இருப்பதால் அவரது சொந்த ஊரான பனைக்குளம் ஜமாத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்க சென்றார். ஆனால் திருமணம் நிச்சயம் முடிந்து விட்ட நிலையில் இந்த புகார் மீது ஜமாத் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க முடியாது என கூறியதாகவும், நாசர்  அலி திருமணம் செய்ய உள்ள பெண்ணின் ஊரான காரைக்குடியில் இது தொடர்பாக புகார் கூறுமாறு பிரபுல்லா சுபாஷை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரபுல்லா சுபாஷ் காரைக்குடி சென்றுள்ளதாக தெரியவருகிறது.