வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (25/03/2018)

கடைசி தொடர்பு:07:00 (25/03/2018)

இதுவரை 27,000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி...! கூடங்குளம் வளாக இயக்குநர் தகவல்

கூடங்குளம் அணு உலைகள் மூலமாக இதுவரை 27,000 மில்லியன் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக அணு உலை வளாக இயக்குநர் சௌத்ரி தெரிவித்தார்.

கூடங்குளம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் சௌத்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் பராமரிப்பு பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிநாள் நடைபெற்று வருகின்றன. அணு உலை, அதிகபட்சமாக 300 வேலை நாட்களுக்கு மேல் இயக்கப்பட்டதும் அவற்றின் செயல்பாட்டை நிறுத்தி பராமரிக்க வேண்டும். அதன்படி, இரண்டாவது அணு உலையில் பராமரிப்பு மற்றும்  எரிபொருள் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் முடிவடைந்து மே மாதம் இரண்டாவது வாரத்தில் 2-வது அணு உலை செயல்பட தொடங்கும். 

அணு உலை வளாகத்தில் 3 மற்றும் 4-வது உலைக்கான  கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகிறது. 5 மற்றும் 6-வது அணு உலைக்கான பணிகள் விரைவில் தொடங்கும். அந்தப் பணிக்கான அடிப்படைப்  பணிகள் நடைபெற்று வருகின்றன.  கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அணு உலைகளின் மூலமாக இதுவரை 27,000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு உள்ளது.  

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரக்கூடிய 3 மற்றும் 4-வது அணு உலையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது. தொழில் நுட்பப் பணிகளுக்கு மட்டுமே அந்த தொழில்நுட்பம் கற்ற வெளியூரை சேர்ந்தவர்கள் வேலை பார்கின்றனர். ஆகவே, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கி வருகிறோம்" என்றார்.