வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (25/03/2018)

கடைசி தொடர்பு:07:41 (25/03/2018)

தி.மு.க மாநாட்டில் கலந்துகொள்ள சென்றபோது மரணமடைந்த மாற்றுத்திறனாளி...!

மாநாட்டில்

தி.மு.க மண்டல மாநாட்டில் மாற்றுத்திறனாளி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நசியனூர் வேல் நகரைச் சேர்ந்தவர் தங்கமுத்து. 47 வயதான தங்கமுத்து திருமணம் ஆகாதவர். டிரைவராக பணியாற்றி வந்த இவர், சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் சிக்க, அவருடைய வலது கால் துண்டாகியிருக்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உடல் நலம் தேறியவர், செயற்கைக் கால் பொருத்தி வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்தநிலையில், பெருந்துறைய சரளை பகுதியில் நடைபெறும் தி.மு.க மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தங்கமுத்து தனது நண்பர்களுடன் வேனில் வந்திருக்கிறார். நண்பர்கள் மாநாட்டுப் பந்தலுக்குச் செல்ல, தங்கமுத்து சிறிது நேரம் கழித்து வருகிறேன் எனச் சொல்லி வேனிலேயே இருந்திருக்கிறார்.

இதனையடுத்து, மாலை 6.15 மணியளவில் நண்பர்கள் வந்து பார்த்த போது தங்கமுத்து வேனில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே மாநாட்டில் இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்திருக்கின்றனர். தங்கமுத்துவை 108 மருத்துவர் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. மாரடைப்பு காரணமாக தங்கமுத்து இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வெயில் அதிகமாக இருந்ததால், தங்கமுத்து வேனில் ஓய்வு எடுக்கிறார் போல, என அவருடைய நண்பர்கள் அலட்சியமாக நினைத்திருக்கின்றனர். மேலும், பார்க்கிங் பகுதி மாநாட்டு திடலில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருந்ததால் நண்பர்களும் தங்கமுத்துவவை கவனிக்க மறந்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளி தங்கமுத்து இறந்த சம்பவம் அவர்களுடைய நண்பர்களை மட்டுமல்லாலது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.