வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (25/03/2018)

கடைசி தொடர்பு:05:00 (25/03/2018)

கட்டுப்பாட்டை மீறிய வேன்; காயமடைந்த அப்பாவி குழந்தைகள்...!

வேன்

தி.மு.க மண்டல மாநாட்டிற்கு வந்த வேன் கவிழ்ந்ததில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நடைபெறும் தி.மு.க மண்டல மாநாட்டிற்காக, கொடுமுடி வெங்கம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 20 பேர் ஒரு வேனில் வந்திருக்கின்றனர். மாநாட்டில் பங்கேற்ற பின்னர், மதியம் 3.30 மணியளவில் கொடுமுடிக்கு திரும்புவதற்காக கிளம்பியிருக்கின்றனர். பெருந்துறை ஆர்.எஸ்., கொம்மக்கோவில் அருகே ஒரு சாலை வளைவில் அதிவேகமாக வேன் திரும்பியிருக்கிறது. அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர்.

இதில் கொடுமை என்னவென்றால், கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்த போது, கொம்மக்கோவில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கோபி தாலுகா கள்ளிப்பட்டியைச் சேர்ந்த கவிதா அவரது மகன் அஜய்விக்ரம் (9) மற்றும் எராங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி மற்றும் அவரது மகன் அர்ஜித் (2) ஆகியோர் மீதும் மோதியது. இதில், அஜய்விக்ரம் (9) மற்றும் கைக்குழந்தை அர்ஜித் (2) பலத்த காயமடைந்தனர்.  

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இதில் வேனில் பயணம் செய்த மூர்த்தி (17) மற்றும் குழந்தை அஜய்விக்ரம் (9) ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய வேன் டிரைவரை, வெள்ளோடு போலீஸார் தேடி வருகின்றனர்.