"கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம்" - எச்சரிக்கும் ஜாக்டோ - ஜியோ! | JACTO GEO protest in pudukkottai

வெளியிடப்பட்ட நேரம்: 08:27 (25/03/2018)

கடைசி தொடர்பு:08:27 (25/03/2018)

"கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம்" - எச்சரிக்கும் ஜாக்டோ - ஜியோ!

"எங்களது நான்கு அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில், சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்" என்று ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜாக்டோ - ஜியோ

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (24.03.2018.) மாநிலம் தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில், நேற்று மாலை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துக் கொண்டனர். பேரணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ராஜாங்கம், செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்ட ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் பேசுகையில், "புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும்.110 விதியில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அறிக்கையை தாமதிக்காமல் சமர்பிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு தொடர்ந்து கால நீட்டிப்பு செய்வதை தவிர்க்க  வேண்டும். 

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணியாற்றி, தற்போது காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாற்றிய காலத்தை நியமன நாள் முதல் பணிவரைமுறை செய்ய வேண்டும்.

ஊதியக் குழுக்காக அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டும் 1.1.2016 முதல் ஊதியக்குழு மாற்றத்தின் அடிப்படையில் ஊதியத்தினை பெற்று வருகின்றனர். ஆனால், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது தரப்படவில்லை. எனவே, 21 மாதத்திற்கான நிலுவை தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். எங்களது 4 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் சென்னையில் வருகிற மே மாதம்  8 -ம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறும்" என்றனர்.