வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (25/03/2018)

கடைசி தொடர்பு:09:11 (25/03/2018)

போக்குவரத்து கழக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...!

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் போக்குவரத்து கழக கூடுதல் ஆணையர் வீட்டில் நடத்திய சோதனையில் 223 சவரன் நகைகள் சிக்கியிருப்பது திருச்சியில் பரபரப்பை உண்டாகியுள்ளது.

சவரன்

போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என அதிகரித்துள்ள குற்றச்சாட்டுகளால், தமிழகம் முழுவதிலும் உள்ள போக்குவரத்து அலுவலகங்களில் அடிக்கடி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூடுதல் ஆணையராக, சென்னை எழிலகத்தில் பணியாற்றி வருபவர் முருகானந்தம்.  இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது அலுவலகத்துக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டதுடன், முருகானந்தத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மன்னார்புரம், நடுத்தெருவில் உள்ள முருகானந்தத்தின் வீட்டில் இன்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு அதிரடியாக நுழைந்தனர்.  

மூன்று மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ந்த இந்தச் சோதனையில், 223 சவரன் தங்கநகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முருகானந்தத்துக்கு சொந்தமான கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளதால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க