"போராடி இன்ஜினீயரிங் படிச்சோம்.... இப்போ பூ, வளையல் விக்குறோம்! பி.இ., மாணவிகளின் குமுறல் | Engineering graduates sell bangles due to an unemployement

வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (25/03/2018)

கடைசி தொடர்பு:11:24 (25/03/2018)

"போராடி இன்ஜினீயரிங் படிச்சோம்.... இப்போ பூ, வளையல் விக்குறோம்! பி.இ., மாணவிகளின் குமுறல்

வளையல், bangles

பெற்றோரின் அதிகபட்ச ஆசை பிள்ளைகளின் எதிர்காலத்தை சரியான பாதையில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது தான்! குப்புசாமி - மணிமேகலை தம்பதியின் ஆசையும் அதுவாகத்தானிருந்தது. ஆனால் எது நடக்கக் கூடாது என்பதற்காக இரவுப்பகல் பாராது குளிரிலும், வெயிலிலும் உழைத்தார்களோ அதுவே  அவர்களது மகள்களின் வாழ்க்கையில் அரங்கேறிக் கொண்டிருந்தது. தள்ளுவண்டியில் பழக்கடை வைத்திருக்கும் குப்புசாமிக்கு பெரிதாக படிப்பு வாசம் இல்லை. அவரின் மனைவி மணிமேகலை 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களின் இரண்டு மகள்கள் தான் ஷியாமளாவும், ஆனந்தியும். இருவரும் பொறியியல் பட்டதாரிகள். இவர்களின் 'பொறியாளர் கனவு' அவ்வளவு எளிதாக இவர்களுக்குக் கிடைக்கவில்லை.

தஞ்சைக்கு அருகிலுள்ள திருக்காட்டுப்பள்ளியை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் இருவரும் ஒரு சாதாரண பள்ளியில்தான் படித்தார்கள். படிப்பது மட்டும் தான் பெண்ணுக்குச் சொத்து என்ற நம்பிக்கையில் நன்றாக படித்த ஷியாமளா, பத்தாம் வகுப்பில் 460 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் 1053 மதிப்பெண்களும் பெற்றதோடு கணிதத்தில் பள்ளியிலேயே முதலிடம் பெற்றார். இதைப்பார்த்து பூரித்த குப்புசாமியும் மணிமேகலையும் எப்பாடு பட்டாலும் தங்கள் இரு மகள்களையும் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகல் பாராது உழைக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஓரிரு மாதத்திலேயே அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வுக்கு அழைப்பு வர மனதில் பல கனவுகளுடன் சென்ற ஷியாமளாவுக்கு ஒரு அரசு கல்லூரியிலேயே கணினி பொறியியல் துறையில் இடம் கிடைத்திருக்கிறது. இவர் ஒரு வருடத்தை முடிக்கும் தருவாயில் ஆனந்திக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க இரு மகள்களும் 'இன்ஜினியர்' என்ற பெருமிதத்தில் இருந்திருக்கிறார் குப்புசாமி.

ஷியாமளா

ஏறத்தாழ 2.5 லட்சத்துக்கும் அதிகமாகச் செலவு செய்து தங்களின் சக்திக்கு மீறிய ஒரு கல்வியை தங்களின் இரு மகள்களுக்கும் கொடுத்திருந்தனர் இந்த தம்பதியினர். 'தங்களின் இரு மகள்களும் நல்ல வேலைக்குச் சென்று விடுவார்கள்! தங்களின் வாழ்க்கைத் தரமும் மாறிவிடும்' என்று உறுதியாக நம்பியிருந்தனர். கல்லூரியின் இறுதி வருடம் நெருங்கும் சமயத்தில்தான் 'கேம்பஸ் இன்டர்வியூ' என்னும் பெயரில் நிகழ்ந்த கண்துடைப்புகள் எல்லாம் வெட்டவெளிச்சமாயின. அதிலும், ஆனந்தி படித்த கல்லூரியில் அந்த வருட மாணவர்கள்தான் முதன் முதலாக நான்கு ஆண்டு முடித்து வெளியேறி இருந்தனர். மொத்தமாக 108 மாணவர்கள். அந்த கல்லூரிகளில் வளாகத் தேர்வு என்னும் பெயரில் வந்தவை எல்லாம் கால் சென்டர்கள். ஏதோ ஒன்று, இரண்டு ஐ.டி கம்பெனிகள் வந்தாலும், வகுப்புக்கு ஒருவரை மிகவும் சொற்ப சம்பளத்தில் தேர்வு செய்திருக்கிறது. வெறும் 7500 ரூபாய் சம்பளம் என்று தெரிந்தும் வேறு வழி இல்லாமல் சென்னைக்கு சென்றிருகின்றனர் இந்த மாணவர்கள். ஆனால் அங்கு போன பின்புதான் தெரிந்திருக்கிறது சம்பளம் வெறும்  4000 ரூபாய் என்றும் தங்குமிடமும், சாப்பாடும் அவர்கள் சம்பளத்திலேயே பார்த்து கொள்ள வேண்டும் என்பதும். ஊர் பேர் தெரியாத இடத்தில் வெறுங்கையோடு வீடு திரும்புவதை விட வேறுவழி யாருக்கும் தெரியவில்லை. குடும்ப நிலையும், அவமானமும் பாடாய் படுத்த சிலர் ஜவுளிக் கடைகளில் விற்பனையாளர் வேலைக்குச் செல்ல, ஆனந்தி ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கியிருக்கிறார். கடைசியாக 5000 ரூபாய் சம்பளத்திற்கு தன் படிப்புக்குச் சிறிதும் பொருத்தமில்லாத ஒரு நிறுவனத்தில், டி.வி, ஃபிரிட்ஜ் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் பதில் சொல்லும் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இதில் தொடர்பு கொள்ளும் ஒரு வாடிக்கையாளருக்கு ஏற்ப 80 ருபாய் வீதம் சம்பளம் என சொல்ல அதையும் உதறிவிட்டு வந்திருக்கிறார் ஆனந்தி. இதில் கொடுமை என்னவென்றால் இந்த வேலையில் எம்.பி.ஏ பட்டதாரிகளும் அடக்கம்.

ஆனந்தி

"இப்படி எல்லாப் பக்கமும் சுற்றி, கடைசியாக எங்களுக்கு மதிப்பு இல்லை என்று தெரிந்த பின்பு தான் வேறு வழி இல்லாமல் பூக்கட்டவும், வளையல் விற்கவும் ஆரம்பித்தோம். நிறைய போராடி பாத்துட்டோம். அம்மாவும், அப்பாவும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் எங்களை படிக்க வச்சாங்க! சொல்லப்போனால் அப்பா நடுராத்திரி 12 மணிக்குதான் வந்து படுப்பாங்க! ஆனா காலையில 3 மணிக்கு எல்லாம் சரக்கு எடுக்க கிளம்பிடுவாங்க. இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப உறுத்தலா இருந்துச்சு!" என்று பேசிக்கொண்டே வளையலை எடுத்துக் கொடுத்த ஆனந்தி, "அக்காவும் வேலைத் தேடி அலுத்துப் போயிட்டா. நானும் வெளியே பல இடங்களில் அலைஞ்சு வெறுத்துபோய் தான் இங்க வந்தேன்! மேற்கொண்டு படிக்கவும் வசதி இல்லை. படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலை. ஏற்கெனவே படிப்புக்கு வாங்கிய கடன் அப்படியே தான் இருக்கு! இதுக்கு எல்லாம் என்ன தான் தீர்வுன்னே தெரியல!" என்றார் வேதனை கலந்த சிரிப்போடு.  

படிக்க இடம் கிடைக்காமல் உயிரைவிட்ட அரியலூர் அனிதா ஒருபுறம் என்றால், படித்து முடித்தும் வேலைக் கிடைக்காமல் தவிக்கும் இவர்கள் ஒரு பக்கம். நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லிக்கொள்ளும் அதே வேளையில் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் 30% குறைந்து இருப்பதாக கடந்த வருட ஆய்வு முடிவு சொல்கிறது. வசவசவென திறந்து வைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளும் இதற்கு முக்கிய காரணம்தான். இதற்கெல்லாம் யார் பதில் சொல்வார் என்பது தான் இன்றைய வேலையில்லா பட்டதாரிகளின் ஏக்கமாக இருக்கிறது ! கருத்தில் கொண்டு தகுந்த தீர்வு சொல்லுமா அரசு ?


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close