25 நாள்களுக்கு பிறகு சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரம்..!

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்டப்படி சந்தித்து வெற்றி பெறுவேன் எனக் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 

கார்த்தி சிதம்பரம்

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராகப் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டுக்கான அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. முதலீட்டுத் தொகையைக் குறைத்துக் காட்டுவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் அதற்கு ஆதாயமாக தான் மறைமுகமாக நடத்திவந்த நிறுவனத்தின் மூலம் ரூ.10 லட்சத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது.

இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடைபெற்றன. அதன்பின் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தனர். பல்வேறுகட்ட விசாரணைக்குப் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கார்த்தி. இந்தநிலையில், ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த 23-ம் தேதி அன்று  ஜாமீன் வழங்கியது.  

கிட்டத்தட்ட 25 நாள்களுக்கு பிறகு இன்று சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரம், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்டப்படி சந்தித்து வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார். வழக்கின் தன்மை என்ன என்பது நடுநிலையாளர்களுக்கு நன்றாகத் தெரியும் என செய்தியாளர்களிடம் பேசினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!