வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (25/03/2018)

கடைசி தொடர்பு:13:05 (25/03/2018)

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் திண்டாடும் 61 வயது முதியவர்!

இந்தியாவில் பல்வேறு ராணுவ பயிற்சி பள்ளிகளில், காலணி பழுதுபார்க்கும் பணி செய்து விருப்ப ஓய்வு பெற்றவர் சேகர். தற்போது ஊட்டி நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொழில் செய்ய உரிய இடம் இல்லாமல் தவித்து வருகிறார்.

 

முதியவர்நீலகிரி மாவட்டம் ஊட்டி, காந்தல் பகுதியை சேர்ந்தவர் சேகர், இவர் 1983ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை குன்னுõர், சென்னை, ஐதராபாத், பெங்களூரு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளிகளில், அதிகாரிகள் மற்றும் பயிற்சி மாணவர்களுக்கு காலணி பழுது பார்க்கும் பணியை செய்து வந்தார். கடைசியாக ஐதராபாத் ஈ.எம்.ஈ., சென்டரில் பணியாற்றிய போது, அல்சரால் பாதிக்கப்பட்டதன் காரணமாக, அப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊரான ஊட்டிக்கே திரும்பியுள்ளார். பின்னர்,ஊட்டி ஷோராம் பேலஸ் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையில் உள் வாடகையாக மாதம் ரூ. 2000 கொடுத்து காலணி பழுது பார்க்கும் கடையை சுமார் 12 ஆண்டுகாலம் நடத்தி வந்துள்ளார்.  

 இது குறித்து சேகர் கூறுகையில், “ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காலணி பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு இரு மகள்கள், திருமணம் செய்து கொடுத்து விட்டேன். மனைவி ‘எலும்புருக்கி’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனக்கு கிடைக்கும் சொற்ப பென்ஷன் தொகையை வைத்து அவரது மருத்துவ செலவை கவனிக்க முடியவில்லை. இந்நிலையில் நகராட்சி ரோட்டோர ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது எனது கடையையும் அகற்றி விட்டனர். அப்போதும் கூட ரோட்டோரத்தில் திறந்த வெளியில் காலணிகளை பழுது பார்த்து வந்தேன்.வெயில், மழையை எதிர்கொள்ள முடியாமல் தொழில் செய்ய முடியவில்லை.  வயோதிகம் காரணத்தால் என்னால் வேறு வேலைகளை எளிதாக செய்ய முடியாததால், கலெக்டரிடம் கடை அமைத்து தர கோரி மனு அளித்தேன். மனு மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டும், இதுவரை எனது மனு மீது நகராட்சி நிர்வாகம் எவ்வித விசாரணையும் செய்யவில்லை. நாள் ஒன்றுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை இருந்த வருமானமும் இல்லாமல், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வேலை செய்ய சரியான இடம் இல்லாமல் தவித்து வருகிறேன், நகராட்சி நிர்வாகம் பெட்டி கடை அமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க