வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (25/03/2018)

கடைசி தொடர்பு:14:05 (25/03/2018)

“நாங்கள் சட்டப்பேரவைக்குள் செல்ல யார் அனுமதியும் தேவையில்லை“ - பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது புதுச்சேரி சட்டசபை

பரபரப்பான சூழலில் நாளை தொடங்கும் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

புதுச்சேரி
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதில்லை. மாறாக அரசின் மூன்று மாத செலவீனங்களுக்காக அனுமதி பெறும் வகையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக நாளை காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் உரை இடம்பெறுவது மரபு. ஆனால் கடந்த ஆண்டு ஆளுநர் உரை இடம்பெறவில்லை. ஆனால் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆளுநர் கிரண்பேடி உரையாற்ற இருக்கிறார். அதனைத் தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி அரசின் மூன்று மாத செலவீனங்களுக்கு பேரவையின் அனுமதி கோரி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து 27, 28 ஆகிய இரு நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், அரசின் கூடுதல் செலவீனங்களுக்கு அனுமதி பெறும் விவாதமும் நடைபெற உள்ளது.
 

இதற்கிடையில் மத்திய அரசு நியமனம் செய்த மூன்று பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்களை இதுவரை சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்க மறுத்து வந்த நிலையில், அவர்களுடைய நியமனம் செல்லும் என சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று சபாநாயகர் அவர்கள் மூன்று பேரையும் சட்டப்பேரவைக்குள் அனுமதிப்பாரா என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், “நாங்கள் சட்டப்பேரவைக்குள் செல்ல யார் அனுமதியும் தேவையில்லை. எங்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாவிட்டாலும் நாங்கள் சட்டப்பேரவைக்குள் செல்வோம்” என்று நியமன எம்.எல்.ஏக்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  நாளை சட்டப்பேரவை கூட இருப்பதால் சட்டப்பேரவை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாதவாறு தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க