`துறைமுகத்துக்கு ஆதரவாக மனுக் கொடுக்க ஏமாற்றி அழைத்து வந்தனர்!’ மீனவ கிராமப் பெண்கள் குமரி ஆட்சியரிடம் புகார்

கன்னியாகுமரியில் அமைய உள்ள வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக மனு கொடுக்க தங்களை ஏமாற்றி அழைத்து வந்ததாக கடற்கரை கிராம பெண்கள் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக மனு  அளித்த பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் முதல் கீழ மணக்குடி வரை உள்ள கடற்கரை பகுதியில் வர்த்தக துறைமுகம் அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனெவே குமரி மேற்குமாவட்ட பகுதியில் உள்ள இனயம் பகுதியில் துறைமுகம் அமைக்க மத்திய அரசு முயற்சித்தது. அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவளம் பகுதிக்கு துறைமுக திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கும் அப்பகுதி கடலோர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

துறைமுகம் அமைவதற்கு ஆதரவாகக் கடந்த 22-ம் தேதி கீழமணக்குடி ஊர் பொதுமக்கள் சார்பாக என்ற முகவரியுடன் பிரியா என்பவர் தலைமையில் வந்த சில மீனவ பெண்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதல்ந்த மனுவில், `கீழமணக்குடி - கோவளம் பகுதியில் துறைமுகம் வருவதாக அறிகிறோம். துறைமுகம் அமைவதால் இப்பகுதி மேலும் வளச்சியடையும் என நம்புகிறோம். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும். துறைமுகம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளில் எங்கள் ஊருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மீன்பிடி தொழில் செய்ய ஏதுவாக சிறிய மீன்பிடி துறைமுகமும் அமைத்துத் தர வேண்டும். துறைமுக பணிகளில் மீனவ இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கோடி முனைப்பகுதியை சேர்ந்த கிரேசி என்பவர் தலைமையில் சில பெண்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், `சுய உதவிக்குழுவுக்கு லோன் வாங்கித் தருவதாக கலெக்டரிடம் மனு அளிக்க வரும்படி எங்களை அழைத்து வந்தனர். பின்னர், திடீரென துறைமுகத்துக்கு ஆதரவாக மனு கொடுத்ததாக மீடியாக்களுக்கு பேட்டி அளித்தனர். எனவே எங்களை ஏமாற்றிய பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கீழ மணக்குடி துறைமுறைத்துக்கு அதரவாக மீனவ கிராமத்து பெண்கள் மனு அளித்ததும், மனுகொடுக்க தங்களை ஏமாற்றி அழைத்து வந்ததாக மற்றொரு தரப்பு பெண்கள் மனு அளித்ததும் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!