மதுரையில் தொடங்கியது 'வேல் சங்கம ரத யாத்திரை!'

சமீபத்தில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராமராஜ்ய ரத யாத்திரையை தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் வேல் சங்கம ரத யாத்திரை இன்று தொடங்கப்பட்டது. 

சங்கம ரத யாத்திரை

இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில், முருகனின் அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் வேல் சங்கம ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய  மதுரை மாவட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவர் ராஜரத்தினம், ''நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த ஆன்மீகத் தமிழகத்தை அதன் வழியில் தொடரும் வகையிலும், பிரிவினைவாத பயங்கரவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை காக்கவும், சாதி, மதம், மொழி வேறுபாடுகள் கலந்து  மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இந்த வேல் சங்கம ரத யாத்திரையை தொடங்கியுள்ளோம். 

முருகனின் வடிவமாகப் பார்க்கப்படும் வேல்கள், கடந்த 24 ஆம் தேதி பழனி முருகன் கோயிலில் பூஜிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் வலம் வந்து, இன்று ஒவ்வொரு அறுபடை வீட்டிலுமிருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேல் ரதம் கிளம்புகிறது. வருகிற 29ஆம் தேதி மாலை மதுரைக்கு அனைத்து வேல் ரதங்களும் வந்து சங்கமமாகும். இதோடு பல்வேறு பகுதிகளில் பூஜிக்கப்பட்ட வேல்களும் இங்கு சங்கமமாகும் அன்று மாலை மதுரையில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் இந்து ஆலய மீட்பு இயக்க நிறுவனர் ஹெச்.ராஜா உரையாற்றுகிறார்'' என்றார். சமீபகாலமாக திராவிட , தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த ஹெச்.ராஜா முடிவு செய்துள்ளாராம். ஆனால், அவருடைய இத்திட்டங்களுக்கு  பா.ஜ.க. நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!