வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (25/03/2018)

கடைசி தொடர்பு:12:48 (04/07/2018)

`தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட வேண்டும்!’ - ஜி.கே.மணி யோசனை

காவிரி நிதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அத்தனைக்கட்சித் தலைவர்களும்  ஓரணியில் திரண்டு,டெல்லிக்குச் சென்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிட வேண்டும்"என்று பா.ம.க.தலைவர் ஜி.கே. மணி கூறினார். 

ஜி.கே.மணி

புதுக்கோட்டை; கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணி   இன்றைக்கு புதுக்கோட்டை நகருக்கு வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கும் அறிவிப்பை மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் நேற்றைக்கு அறிவித்திருக்கிறார். இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை குழு அமைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளைப் பற்றி அக்கறைக் கொள்ளவில்லை என்பதைதான் காட்டுகிறது. நீர்வளத்துறை கர்நாடக மாநிலத்துக்குச் சாதகமான முடிவை  எடுத்திருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி வண்மையாக கண்டிக்கிறது. நதி நீர் விவகாரத்தில் தண்ணீரை பறிக்கொடுத்தது போல், இப்போது நிலங்களையும் பறிக்கொடுக்கும் ஆபத்தான சூழ்நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், உள்ளிட்ட திட்டங்களுக்காக புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை ஆக்கிரமிக்கும் வேலைகளைத் தொடங்கி விட்டார்கள்.

தண்ணீரில் வஞ்சிக்கப்பட்டோம். இப்போது,நமக்கு சொந்தமான வாழ்வாதாரமான விளைநிலங்களையும் பறிகொடுக்க இருக்கிறோம். எல்லா விஷயங்களிலும் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் விதமாகவே செயல்பட்டு வருகிறது. 'கேளுங்கள் தரப்படும்.. தட்டுங்கள் திறக்கப்படும்' என்பார்கள். நாம் முதலில் கேட்டுப்பார்த்தோம். எதுவும் கிடைக்கவில்லை. இனி,தட்டித்தான் பார்க்க வேண்டும். இதற்காக, தமிழக தலைவர்கள் டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு, அவர் வீட்டுக் கதவைத் கட்டவேண்டும்.

இதற்காக நாமெல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்படியொரு நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ்நாடும் தமிழர்களும் இருக்கிறோம். ராஜீவ்காந்தி, பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை கொண்டு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலை ஒருநாள் கூட தாமதமில்லாமல் நடத்தவேண்டும் என்று அதில் கூறியிருந்தார். ஆனால், இன்றைக்கு உள்ளாட்சி தேர்தலை வருடக்கணக்கில் நடத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்காக ஒதுக்கியுள்ள பல ஆயிரம் கோடி நிதி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. உள்ளாட்சிதான் நல்லாட்சி. எனவே,அந்தத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கான வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும்"என்றார்.