வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (25/03/2018)

கடைசி தொடர்பு:23:30 (25/03/2018)

தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்: ஆய்வு மாணவர் கைதால் பரபரப்பு

தஞ்சைத்  தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை  முன் வைத்துப்  போராடி வந்த ஆய்வு மாணாக்கர்-ஆய்வு சிறகுகள் கூட்டமைப்பின் தலைவர் சிவக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் தமிழ் பல்கலைக்கழகம் மீதான ஊழல் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தமிழ் பல்கலைக்கழகம்

தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன், பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குவதாக ஆய்வு மாணாக்கர்-ஆய்வு சிறகுகள் கூட்டமைப்பினர் ஊழல் குற்றம்சாட்டி வருகிறார்கள். "பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி இடங்களுக்கு 35 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை லட்சம் பெற்றுக்கொண்டு தகுதியில்லாத நபர்களைத் துணைவேந்தர் பாஸ்கரன் நியமனம் செய்திருப்பதாகவும், இதற்குப் பல்கலைக்கழக பதிவாளர் உடந்தையாக இருப்பதாகவும்”ஆய்வு மாணாக்கர்-ஆய்வு சிறகுகள் கூட்டமைப்பின் தலைவர் சிவக்குமார் புகார் தெரிவித்து வந்தார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஆளுநர், இந்திய குடியரசுத்தலைவர் உள்ளிட்டவர்களுக்குக் கடிதம் அனுப்பினார். இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அச்சம் தெரிவித்தும் வந்தார். இந்நிலையில் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் இருந்து சிவக்குமாரை தொடர்புகொண்டு, விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். நேற்று காவல்நிலையம் சென்ற சிவக்குமார் கைது செய்யப்பட்டு பாபநாசம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துணைவேந்தர் பாஸ்கரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள். இந்தக் கைது சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதால் காவல்துறையினர் ரகசியம் காத்து வந்தனர். ஆனாலும் இந்த விவகாரம் வெளியில் கசிந்து பெரும் சர்ச்சையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.