தாழ்வாகச் சென்ற மின்சாரக் கம்பி உரசி வைக்கோல் எரிந்து நாசம்!

இலுப்பூர் அருகே  வைக்கோல் ஏற்றிச்  சென்ற மாட்டுவண்டியின்மீது தாழ்வாக இருந்த  மின்சாரக் கம்பி உரசியதால், மின்சாரம் பாய்ந்து  வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் இரண்டு மாடுகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் மாட்டுவண்டிக்காரர் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 


வைக்கோல்
 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள எருக்குமணிப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவரிடம் சில கறவை மாடுகளும் காளை மாடுகளும் உள்ளன. அவற்றுக்குத் தேவையான வைக்கோல் தீவனத்தை விலைக்கு வாங்கிக்கொண்டு  இவருக்குச் சொந்தமான மாட்டு  வண்டியில் வைக்கோல்களை ஏற்றிக்கொண்டு இன்று பிற்பகல் தனது ஊருக்குச் சென்றுள்ளார். ஊருக்கு அருகில் உள்ள பொட்டல் வெளிவழியாக வந்தபோது, குறுக்காகச்  சென்ற மின்சாரக்கம்பிகள் வைக்கோலில் உரசும் உயரத்தில் இருப்பதைக்  கவனிக்கவும் கணிக்கவும் தவறிவிட்டார். கம்பிகள் நன்றாகக் காய்ந்திருந்த வைக்கோலில் உரசி தீ பற்றிக் கொண்டுவிட்டது. இதனைக் கவனிக்காமல் சண்முகமும் வண்டியைக் கொஞ்சதூரத்துக்கு ஓட்டிக்கொண்டு வந்துவிட்டார்.

வைக்கோலை அணைக்கும் வீரர்கள்அதற்குள்ளாகத் தீ மளமளவெனப் பரவி, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. சட்டென்று சுதாரித்த சண்முகம்,  மாடுகளை உடனடியாக அவிழ்த்துவிட்டு, வண்டியைச் சாய்த்து, எரிந்துகொண்டிருந்த வைக்கோல் முழுவதையும் பொட்டல்வெளியில் சரித்துவிடமுயன்றார். மாடுகளும் மிரளத் தொடங்கின. பின்னர் உதவிக்கேட்டு குரல் கொடுத்திருக்கிறார். அருகில் உள்ள கிராமத்து இளைஞர்கள் ஓடிவந்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள் மாட்டுவண்டி முழுவதுமாக எரிந்தது. மாடுகளுக்கும் லேசாகக் காயம் ஏற்பட்டது. எல்லோருமாகச் சேர்ந்து  வண்டியில் எரிந்துகொண்டிருந்த வைக்கோல் முழுவதையும் சரித்துவிட்டு மாட்டுவண்டியை சற்றுத் தள்ளி நிறுத்தினார்கள். இதற்குள், தீ அணைக்கமுடியாத அளவுக்கும் அருகில் செல்ல முடியாத அளவுக்கும் எரியத் தொடங்கியது. அங்கிருந்த இளைஞர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .அந்த பகுதிமுழுவதும் உயரழுத்த மின்சாரக் கம்பிகள் கைக்கு எட்டும் தொலைவில் உள்ளதால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது.  இது  குறித்து பலமுறை மின்சார வாரியத்துக்குப் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எதுவும்  எடுக்கவில்லை. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படுவதற்குள் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும்" என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!