வெளியிடப்பட்ட நேரம்: 03:45 (26/03/2018)

கடைசி தொடர்பு:03:45 (26/03/2018)

அழைப்புகள் மற்றும் மெசேஜ் தகவல்களை சேகரித்ததா ஆப்? -சர்ச்சையில் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் தொடர்பாகத் தனிநபர் தகவல்களைப்  பாதுகாக்க தவறிவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை ஒப்புக்கொண்ட  நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். கடந்த வாரம் முழுவதுமே #DeleteFacebook என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பரவி வந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ஃபேஸ்புக். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தான் பயன்படுத்திய ஃபேஸ்புக் செயலி மொபைலில் இருந்து அழைப்புகள், மற்றும் மெசேஜ் ஆகிய தகவல்களைச் சேகரித்ததாக ஒரு குற்றச்சட்டை முன் வைத்திருக்கிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த சாப்ட்வேர் டெவலப்பர் ஒருவர்.

கடந்த 2015 -ம் முதல் 2016 -ம் ஆண்டு வரையில் அவர் பயன்படுத்திய மொபைலில் இருந்து அவர் யாரையெல்லாம் அழைத்திருக்கிறார், யாரிடமிருந்தெல்லாம் அவருக்கு அழைப்புகள் வந்திருக்கின்றன என்ற தகவல்களும், மெசேஜ் தொடர்பான தகவல்களும் சேகரிக்கப் பட்டிருக்கின்றன. அழைப்பின் நேரம், அழைப்பு எவ்வளவு நேரம் நீடித்திருக்கிறது என்ற தகவல்களும் அடக்கம். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பழைய பதிப்புகளில் ஒரு ஆப் தானாகவே தகவல்களை சேகரித்துக்கொள்ளும் வகையில் பெர்மிஷன் அமைப்புகள் இருந்தது எனவே அந்தச் சமயத்தில் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் இது தொடர்பாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.